வரவுசெலவுத் திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு - செலவுத் திட்டம்) நேற்று 114 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று இரவு 7.40 மணிக்கு ஆரம்பமானது. இதற்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவு - செலவுத் திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெற்றது. இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் நேற்று மார்ச் 21ஆம் திகதி வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் இடம்பெற்றது.
மேலும், நாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசமைப்பின் 79 ஆவது உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.