Breaking News

சுமந்திரன் ஒப்பாரி வைக்க முடியாது


இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் சிறீதரன்-சுமந்திரனுக்கிடையிலான முரண்பாடு, பகை, விரோதம் நீறு பூத்த நெருப்பாக முடிவின்றி தொடர்ந்து புகைந்து கொண்டே  இருக்கின்றது. கட்சியின் உதவி செயலாளராக இருக்கும் போதே சிறீதரனுக்கு கட்சிக்குள் பெரும்  குடைச்சல் கொடுத்து வந்த சுமந்திரன், தற்போது பதில் பொதுச்  செயலாளராகி விட்ட நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் பலமாக சிறீதரனுக்கு எதிராக ஆட ஆரம்பித்துள்ளார்.

முதலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு இலக்கு வைத்த  சுமந்திரன், அதில் சிறீதரனிடம் தோல்வி கண்ட நிலையில்,  சிறீதரனையும் தலைவர் பதவியை ஏற்கவிடாது, தடுத்து சாதித்ததுடன்,  அடுத்ததாகப் பாராளுமன்ற  தேர்தலில் சிறீதரனுடன் போட்டியிட்ட நிலையில், அதிலும் சிறீதரனிடம் தோல்வி கண்டு பாராளுமன்றம்  போகும் வாய்ப்பை இழந்தார். ஆனால், பாராளுமன்றம் போக வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் அவர் கைவிடவில்லை.

இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகப் பதவியேற்ற பின்னர், எம்.ஏ.சுமந்திரன் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், “பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், யாழ். தேர்தல் மாவட்டத்திலே எங்களுடைய கட்சியிலே இரண்டாவது இடத்திலே நான் இருக்கிறேன். எங்களுடைய கட்சிக்கு இந்த தடவை ஒரு ஆசனம் கிடைத்த காரணத்தால் மட்டும் தான் நான் பாராளுமன்றத்தில் பிரதிநிதியாக முடியவில்லை. இரண்டு ஆசனங்கள் கிடைத்திருந்தால் நானும் பாராளுமன்றத்தில் இருந்திருப்பேன்.

இந்த தேர்தல் முறைமையின் கீழ், முதலாவது இடத்தை பெற்ற சிவஞானம் சிறீதரன் ஏதாவது காரணத்துக்காக எம்.பி. பதவியிலிருந்து விலகுவாராக இருந்தால், தானாகவே, எவரும் எதுவும் சொல்லாமலே நான் பாராளுமன்ற உறுப்பினராக வருவேன். அதில் எந்தத் தவறும் கிடையாது. விருப்பு வாக்கு அடிப்படையிலே நான் இரண்டாம் இடத்தில் இருக்கிறேன். எங்கள் கட்சியின் அரசியல் குழுக்  கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தல்கள் வருகின்றது என சிறீதரன் சுட்டிக்காட்டியிருந்தார். முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவது தொடர்பாக அவர் நேரடியாக சொல்லவில்லை. ஆனால், மாகாண சபை தேர்தல் வருகிறது. அந்த வகையில், சில மாற்றங்கள் நிகழலாம். சுமந்திரன் அந்த பதவிக்கு வரலாம் என்றும் சொல்லி இருந்தார். 

சுமந்திரனின்  கருத்துக்கு,  கட்சி வழக்கு நிலுவையில் உள்ளது. கட்சியில் உள்ளவர்களே வழக்கினைத் தாக்கல் செய்திருக்கின்றனர். தாயினை நீதிமன்றத்தில் வைத்துக்கொண்டு தாயிடம் உணவு கேட்பது. பால் அருந்தப் போகின்றோம் என்று சொல்வது போலுள்ளது. நாம் செய்வது இன விடுதலைக்கான அரசியல்.   பதவிகளுக்கான அரசியல் அல்ல,   பதவிகளுக்கு அரசியல் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறான சூழல் இருக்கும்போது, எனக்கு வடக்கு  முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் இல்லை  என சிறீதரன் பகிரங்கமாகக் கூறி, சுமந்திரனின் மீள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசைக்கு ஆப்பு வைத்து விட்டார்.  இதனால் சிறீதரன் மீது இன்னும் சினமடைந்த சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண வீட்டில் தனக்கும், தனது அணிக்கும் எதிராகக் கிளம்பிய எதிர்ப்புக்கள், துரோகிகள் பட்டத்தை வைத்து சிறீதரனுக்கு எதிராகக் காய் நகர்த்தியதுடன், தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில்“மாவை சேனாதிராஜா சுகவீனமடைந்ததும் அவரை நான் வைத்தியசாலையில் பார்வையிட்டேன். பின்னர் அவரின் மரணச் செய்தி அறிந்ததும் நேரடியாக அவரின் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினேன்.

அவரது குடும்பத்தினருடன் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக உரையாடினேன். ஆனால், எனக்குப் பின்னர் சென்றவர்கள் தவறாக நடத்தப்பட்டார்கள். மாவை சேனாதிராஜாவுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்ட குலநாயகம் அங்கு முழுமையாகவே செல்ல முடியாத நிலைமை இருந்தது. மாவை சேனாதிராஜாவின் இறுதிச் சடங்கில் மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று நான் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களுடன் பதாகைகளைக் கட்டினார்கள் நாங்கள்  அங்குச் சென்றால் குழப்பங்களை ஏற்படுத்த குண்டர்களும் தயார் நிலையில் இருந்தார்கள் . ஆகவே மறைந்த தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்று அங்கு  சலசலப்பு ஏற்பட்டால் அது மாவை சேனாதிராஜாவுக்கு அகௌரவத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும் என்பதனால் ஒதுங்கியிருந்தேன்.

அதுமட்டுமன்றி, மரணச்சடங்கில் அரசியல் செய்யும் மிக மோசமான நிலைமை  இருந்தது. இந்த நிலைமைக்கு வெளியில் இருப்பவர்களும் எமது கட்சியில்  சிலரும் காரணமாக இருக்கின்றார்கள் என்பது மிக மோசமான விடயம்.நான் உள்ளிட்டவர்களின் பங்கேற்பின்மையை பெரு வெற்றியாகக் கொண்டாடுபவர்கள் இன்னும் கட்சிக்குள் இருக்கின்றார்கள்.

மரணச் சடங்கையே அரசியலுக்குப் பயன்படுத்துகின்ற இழிவான அணியொன்று கட்சிக்குள் இருந்தால் அந்த அணியுடன் எப்படி நான் உள்ளிட்டவர்கள் இணைந்து செல்ல முடியும்? எனவே, இந்த வேறுபாடுகள்தான் தமிழரசுக் கட்சிக்குள் இரு அணிகளாகத் தெரிகின்றன. இந்த விடயம் தொடர்பாக நாம் ஒழுக்காற்று நடவடிக்கைகளை விரைவில் எடுப்போம். கட்சித் தலைவர் தற்போது பொலிஸில் முறைப்பாட்டை செய்துள்ளார். விசாரணைகள் நடைபெறுகின்றன, விரைவில் இதன் சூத்திரதாரிகள் வெளிப்படுத்தப்படுவார்கள்’’ என்று கூறியிருந்தார்.

மரணச் சடங்கில் அரசியல் செய்யும் மிக மோசமான நிலைமை  இருந்தது, இந்த நிலைமைக்கு வெளியில் இருப்பவர்களும் எமது கட்சியில்  சிலரும் காரணமாக இருக்கின்றார்கள் என்பது மிக மோசமான விடயம். மரணச் சடங்கையே அரசியலுக்குப் பயன்படுத்துகின்ற இழிவான அணியொன்று கட்சிக்குள் இருந்தால், அந்த அணியுடன் எப்படி நான் உள்ளிட்டவர்கள் இணைந்து செல்ல முடியும்? என்பது சுமந்திரனின் கேள்வி. 

மரணச் சடங்கையே அரசியலுக்குப் பயன்படுத்துகின்ற இழிவான அரசியலை  முதலில் தமிழரசுக் கட்சிக்குள் ஆரம்பித்தவர் சுமந்திரன். தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் மரணமடைந்த நிலையில், சம்பந்தனின்  மரண வீட்டை அரசியலாக்கி சம்பந்தனின் மரண வீட்டில் சிறீதரன் அணியினரை கிட்ட நெருங்க விடாது, சாணக்கியன். சயந்தன் என்ற இரு விசுவாசிகளை வைத்துக்கொண்டு சம்பந்தனின் மரணத்தை, மரண வீட்டை, இறுதி  ஊர்வலத்தைத் தனது இழிவான அரசியலுக்குப் பயன்படுத்தியவர் சுமந்திரன்.

சம்பந்தனின் உயிர் பிரிந்தவுடனேயே சுமந்திரன் அணி சம்பந்தனின் இறுதிக்கிரியை தொடர்பான அனைத்து விடயங்களையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதால், அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பது தமிழரசுக் கட்சியினரிலேயே பெருமளவானோருக்குத் தெரிந்திருக்கவில்லை.

சம்பந்தனின் மரணச் சடங்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  இன்னொரு அணியான சிறீதரனின்  வகிபாகம் இருந்து விடக் கூடாது என்பதில் தீவிர  கவனம் எடுத்த சுமந்திரன் அணி, சம்பந்தனின் உடல் அக்கினியுடன் சங்கமமாகும் வரை சம்பந்தனின் உடலுடன் சங்கமித்தே இருந்தனர். இதனால் இலங்கை தமிழரசுக் கட்சியின் அப்போதைய   தலைவரான  மாவை சேனாதிராஜா, சிறீதரன்  முதல் தமிழரசுக் கட்சியின் உண்மையான விசுவாசிகள் வரை வெறும் பார்வையாளர்களாக வந்து சம்பந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவேண்டிய நிலைமையை இந்த அணி ஏற்படுத்தியிருந்தது.

சம்பந்தனின் பூதவுடல் கொழும்பு பொரளை மலர்ச்சாலையிலும் பின்னர் பாராளுமன்றத்திலும் அஞ்சலிக்காக  வைக்கப்பட்ட  நிலையில், அவரது சொந்த  ஊரான திருகோணமலைக்கு கொண்டு செல்ல முன்னர் கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் சிறீதரனால், சுமந்திரன் அணியிடம் விடுக்கப்பட்டு,  முதலில் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அச்செய்தி சிறீதரனால்  ஊடகங்களுக்கும் வழங்கப்பட்டது.

இவ்வாறான நிலையில், திடீரென சிறீதரனின்  இந்த வேண்டுகோளை நிராகரித்த சுமந்திரன் அணி, “சம்பந்தனின் உடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவரங்கத்தில் மட்டுமே அஞ்சலிக்காக வைக்கப்படும்” என்ற அறிவிப்பை விடுத்தது. அவ்வாறானால் சம்பந்தனின் உடலைத் தரை வழியாக யாழுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது, “தமிழர் பகுதிகளில் மக்கள் அவருக்கு வழி நெடுகிலும் அஞ்சலி செலுத்தக்கூடியதாக இருக்கும்” என்ற வேண்டுகோளை சிறீதரன் தரப்பு விடுத்தபோதும்,  அதனையும் நிராகரித்த சுமந்திரன் அணி, சம்பந்தனின் உடலை விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு சென்று அஞ்சலிக்கு வைத்து, பின்னர் அங்கிருந்து  விமானம் மூலமே  திருகோணமலைக்கும்  
எடுத்துச் சென்றது.

இவ்வாறு  சிறீதரன் அணியினரை சம்பந்தனின் இறுதிக்கிரியை காரியத்தில் நெருங்க விடாது பார்த்துக் கொண்ட சுமந்திரனுக்குத்தான் தரும்போது,  தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண வீட்டில் சிறீதரனுக்கு  ஏற்பட்ட அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.  மரணச் சடங்கையே அரசியலுக்குப் பயன்படுத்துகின்ற இழிவான அணியொன்று கட்சிக்குள் இருந்தால், அந்த அணியுடன் எப்படி நான் உள்ளிட்டவர்கள் இணைந்து செல்ல முடியும்? என கேள்வி எழுப்பும் சுமந்திரன், தான் அந்த இழிவான அரசியலின்  ஆரம்ப கர்த்தா. ஆனால், அவரைப்  பொறுத்தவரையில் ‘மற்றவர்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னி தனக்கு வந்தால் அது இரத்தம்’ என்ற  சித்தாந்தமேயுள்ளது.  

ஆக, சம்பந்தனின் மரண வீட்டில் இழிவான அரசியல் செய்த சுமந்திரனை, 
அதே தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண வீட்டில் ‘கர்மா’ தாக்கியுள்ளது. எனவே,  மரணச் சடங்கையே அரசியலுக்குப் பயன்படுத்துகின்ற இழிவான அணியொன்று கட்சிக்குள் இருக்கின்றது என சுமந்திரன் ஒப்பாரி வைக்க முடியாது. ஏனெனில், அந்த இழிவான அரசியலின் ஆரம்ப கர்த்தா  சுமந்திரன்.

‘கர்மா’  அல்லது ‘வினைப்பயன்’ என்பது ஒருவரின் தற்போதைய மற்றும் முந்தைய ஜென்மத்தில் செய்த செயல்களின் கூட்டுத்தொகையாகும். இதுதான் தற்போது சுமந்திரனுக்கும் நடந்து வருகின்றது. அந்த ‘கர்மா’ தான் சுமந்திரனை ‘’பூமராங’காக  தாக்கியுள்ளது. வினை விதைத்தவன் வினையைத்தானே அறுக்க முடியும். எப்படி தினையை எதிர்பார்க்க முடியும்?