ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன எந்த வகையிலும் ஆதரவளிக்காது – உதயங்க வீரதுங்க!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த வகையிலும் ஆதரவளிக்காது என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
“பொதுஜன பெரமுனவில் இருந்து யார் வெளியேறினாலும் எமக்கு சவாலாக அமையாது.வரலாற்றில் ரணில் விக்ரமசிங்க தவறான தீர்மானங்களையே மேற்கொண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவடைந்தமை ஐக்கிய தேசியக் கட்சி இன்று முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோல் மைத்ரிபால சிறிசேனவுக்கு கட்சி என்ற ஒன்று இல்லாமல் உள்ளது.
பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ள பலர் விரைவில் வீடு செல்ல நேரிடும். ஏனெனில் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் ஒரு போதும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
பொதுஜன பெரமுன கட்சி சார்பாக நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் பலர் மஹிந்த ராஜபக்ஷவின் அடையாளத்தினாலேயே நாடாளுமன்றம் சென்றனர் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிடகூடாது.
பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறிய எவருக்கும் தனிப்பட்ட விருப்பு வாக்குகள் கிடைக்கப்பெறாது” என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.