Breaking News

ஆடி மாதம் ஏன் சிறப்பு பெறுகிறது ?

 


தமிழ் பஞ்சாங்கப்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி மாதம் ஆகும். சூரியன் கர்க்கடக இராசியில் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். முற்காலத்தில் தமிழர் ஆடிப்பிறப்பைச் சிறப்பாகக் கொண்டாடுவர். தற்காலத்தில் இவ் வழக்கம் அருகிவிட்டது.

ஆடியில் வரும் விசேஷங்கள் ஆடி முதல் நாள் ஆடிப்பண்டிகையைத் தொடர்ந்து, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாக பஞ்சமி, ஆடிப்பெருக்கு, வரலக்ஷ்மி விரதம், ஆடித்தபசு, ஹயக்ரீவர் ஜெயந்தி, மகா சங்கட ஹர சதுர்த்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஆடிக்கிருத்திகை ஆக இத்தனை வைபவங்கள் வருகின்றன. ஆகையால் தெய்வங்களுக்கு உண்டான நாட்களாக விளங்குகின்றன. இம்மாதத்தில் வரும் புதுநிலவு மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதி கொடுக்கும் ஆடி அமாவாசை மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளான ஆடி மாத பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு ஆகியன கொண்டாடப்படுகின்றன.

மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாவன இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.

தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.

இதற்கு காரணம், ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு. ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.

துர்க்கை, காளி உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரியதாகவும் ஆடி மாதம் கருதப்படுகிறது. இதேபோல் 18ஆம் பெருக்கு எனப்படும் ஆடி-18 விழா மிகவும் உன்னதமானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், திதியில் வந்தாலும், புதிய முயற்சிகளை அனைத்து தரப்பினரும் மேற்கொள்ளலாம்.

ஆடிப்பெருக்கு தினத்தில் நதியோரம் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். சுமங்கலிப் பெண்கள் இதுபோன்று வழிபாடு நடத்தினால் அவர்களின் துணைவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். சப்த கன்னிகளை உருவாக்கி ஆடிப் பெருக்கு வழிபாடு மேற்கொள்வதும் நல்ல பலனைத் தரும்.

ஆடி மாதத்தில், ஸ்ரீ சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசி என்பது, ஸ்ரீ சந்திர பகவானின் ஆட்சி வீடாகும். சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி கிரகத்தில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. சிவனை விட சக்திக்கே வல்லமை அதிகமாக பரிமளிக்கிறது. ஆஷாட மாதம் என்று கூறப்படும் இந்த ஆடி மாதம் சக்தி மாதமாக வழிபடப்பட வேண்டும் என்று ஈஸ்வரன், ஈஸ்வரிக்கு அனுக்கிரகம் செய்தார்.அதன் காரணமாகத் தான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த வேப்பிலை, எலுமிச்சம் பழம், கூழ் ஆகியவை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இந்த மாதத்தில் பிராண வாயுவின் சக்தி வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்கும்.

இவைகளை உபயோகப்படுத்துவதில், ஒரு முக்கியமான விஞ்ஞான ரீதியான காரணமும் உண்டு. இந்த நாட்களில் உஷ்ணம் கூடி இருக்கும். அம்மனுக்கு படைத்த ஆடிக்கூழை சாப்பிடும் பொழுது, கூழானது, உஷ்ணத்தைக் குறைத்து, உடலை சீரான வெப்ப நிலையில் வைக்கும். எலுமிச்சம் பழத்திற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் சக்தி உண்டு. வேப்பிலையைப்பற்றி கூறவே வேண்டாம். தீய சக்திகளையும், உடலுக்குக் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும் சக்தி அந்த மருத்துவ குணம் கொண்ட இலைகளுக்கு உண்டு.

பெண்கள், ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி ஆடி ஞாயிறு ஆகிய நாட்களில் விரதம் இருந்தும், வேப்பிலை ஆடை தரித்தும், அலகு குத்தியும், பூ மிதி (தீ மிதி) விழா எடுத்தும் தங்களின் கோரிக்கையை அம்மனிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார்கள்.

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அலகு குத்தலின் வலியோ, பூ மிதியின் பொழுது நெருப்பின் உஷ்ணமோ தெரியாமல் ஆதி பராசக்தி காத்தருள்கிறாள்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாளாகும். ஆடி மாதம் பிறந்தாலே தேவர்களுக்கு சந்தியான வேளை ஆரம்பித்து விடுகிறது.

அந்த மாதத்தில் திருமணம் போன்ற வைபவங்களை வைத்துக் கொண்டால், தெய்வங்களை தொந்திரவு செய்வதோடு அல்லாமல், அவர்களின் ஆசிர்வாதம், அனுக்கிரகம் இரண்டுமே பரிபூர்ணமாகக் கிடைக்காது. இந்தக் காரணங்களால் தான் நாம் ஆடி மாதத்தில் திருமணங்கள் செய்வதில்லை

ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. ஆடியில் விதை விதைத்தால், மழை நாட்களில் பயிர் தழைத்து, தை மாத அறுவடையில் நல்ல மகசூல் கொடுக்கும். விவசாயி ஆனவன் நிலத்தை உழுது, விதை போட்டதில் கையிருப்பு தொகையை செலவழித்திருப்பான். அவனால் நிறைய தொகை கொடுத்து எந்த சாமானும் வாங்க முடியாது. ஆகையால் அவர்களுக்காக ஆடித் தள்ளுபடி விலையில் கொடுக்க ஆரம்பித்தார்கள். அது இன்று வரை தொடர்கிறது.

எது எப்படியோ, ஆடி மாதத்தில் ஞாயிறு பகவானின் சூட்சும சக்திக் கதிர்கள் பூமியில் விழுவதால், ஜப தபங்கள், மந்திரங்கள், பூஜைகள் எது செய்தாலும் பன்மடங்கு பயனைத் தரும் என்று கூறப்படுகிறது.

ஆகையால் பக்த கோடிகள் அனைவரும் இந்த புனிதமான மாதத்தில் தெய்வ காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தெய்வானுகூலம் பெற வேண்டும்’

அம்மன் வழிபாடு, ஆடி மாத சிறப்புகள் பற்றிய விவரம்:-

ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது.

ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது.

ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக பின்பற்றப்படுகிறது.

ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்சமாக அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதம் அம்மன் பக்தர்களுக்கு விசேஷமான காலமாக விளங்குகிறது.

ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இந்தியாவில் பல பகுதிகளில் அம்மனுக்கு பலவித காய்கறிகளை கொண்டு தயாரான கதம்ப சாதத்தை படைத்து வழிபடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

ஆடி மாதம் கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்கப்படாமல் இருக்கும் எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

வருஷந்தோறும் விழாக்கள் இருந்தாலும், அம்பிகையை வழிபாடுவது நமது நாட்டின் மிகப்பெரிய கலாச்சாரமுறை. பொதுவாக செவ்வாய் , வெள்ளி நாட்களில் அம்பிகை பூஜை , அம்பிகை கோவில் , விளக்கு பூஜை, மாவிளக்கு, நாக வழிபாடு , எலுமிச்சை விளக்கு என ஊரே அம்பிகையை வழிபடுவதில் களைக்கட்டும். நவராத்திரியும், ஆடி மாத வழிபாடும் அம்பிகை வழிபாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது. சக்தி வழிபாடு அம்பிகையினை லலிதா திரிபுர சுந்தரியாகவும், தீமைகளை அழிக்கும் காளி மாதாவாகவும் இருமுறைகளில் வழிபடுவர். அதிலும் ஆடிமாதத்தில் சூரிய வெப்பம் குறைய ஆரம்பிக்கும். மழை ஆரம்பிக்கும் காலம் இது. அம்பிகை என்றாலே குளுமை தானே. ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு இவை அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை தான். ஆடிப்பூரம், ஆண்டாள் பிறந்த தினம், அம்பாளுக்கு வளைக்காப்பு அணிவித்து கொண்டாடுவர். அம்பாளுக்கு இந்த மாதத்தில் வளையலை அணிவித்து மகிழ்வது அவரவர் சந்ததியினரை காக்கும்.

பெளர்ணமிக்கு முன்னர் வரும் வெள்ளிக்கிழமையை வரலட்சுமி பூஜையாகக் கொண்டாடுவர். கேட்ட வரம் தரும் லட்சுமி என்ற பொருள்படும் பண்டிகை இதுவாக கொள்ளப்படுகிறது. மாலை நேரங்களில் தமிழ்ப்பாடல்கள், மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகங்கள் , அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ர நாமம் என அவரவர் குடும்ப வழக்கத்திற்கேற்ப துதிகளை மேற்கொள்வர். இதில் மிகவும் விசேஷமாக கருதப்படும் லலிதா சகஸ்ரநாமம் என்று அம்பிகையை ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கும் முறையின் சிறப்பினை பற்றி காண்போம்.


லலிதா என்றால் விளையாடுபவள் என்று பொருள். ஆம் இந்த உலகில் அன்னை லோகமாதா நம் அம்மா தானே. நாமெல்லாம் அவளின் குழந்தைகள் தானே? நாம் ஏன் வாழ்க்கையை சுமையாகவும், கடினமாகவும் கொண்டு வாழவேண்டும். மகிழ்வாக சகல நன்மைகளையும் பெற்று வாழ்ந்து பின் அன்னையையே சேர்ந்து விடலாம். லலிதா சகஸ்ரநாமம் பிரம்மாண்ட புராணத்தில் 36 பிரிவாக லலிதோபகன்யா என்று வருகின்றது.


அகத்திய முனிவருக்கும், ஹயக்கிரீவருக்கும் இடையே நடைபெறும் சம்பாசஷணையாக இடம் பெற்றுள்ளது. மஹாவிஷ்ணுவின் மறு உருவமே. ஹயக்கிரீவர். கல்விக்கான கடவுள் இவர் தான். அப்படிப்பட்ட ஹயக்கிரீவர், அகத்தியரிடம் லலிதமகா திரிபுரசுந்தரியின் மகிமைகளை எடுத்துச் சொல்கிறார். ஸ்ரீ புரம் எனும் அம்பிகையின் ஊரைப் பற்றி விவரிக்கின்றார். தேவதைகளை நோக்கி, நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன் யார், யார் ஸ்ரீசக்ரம், ஸ்ரீவித்யா மற்றும் பிற மந்திரங்களை அறிந்தவர்களோ அவர்கள் என்னைப் பற்றி கூறும் ஆயிரம் நாமங்கள் கொண்ட சுலோகங்களை உருவாக்குங்கள். என் பக்தர்கள் இதனை சொல்லி என்னை வந்து அடையும் பாதையாக அமையட்டும் என்கிறார்.


அதனைக் கேட்டு வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகள் மிக ரகசியமான மந்திரமாக லலிதா சகஸ்ரநாமம் ஸ்லோகத்தினை உருவாக்கினார்கள். ஒரு நாள், தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தாள். அன்னை. அப்போது வாசினி உட்பட எட்டு தேவதைகளையும் லலிதா சகஸ்ரநாமத்தை உச்சரிக்க கண்களால் ஆணையிட்டாள். இதைக் கேட்டு மனம் குளிர்ந்த லோகமாதா “குழந்தைகளே வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகளால் கூறப்பட்ட இந்த சகஸ்ரநாமம் உலக நன்மைக்காக என் இசைவால் கூறப்பட்டது. இதனைப் படிப்பவர்கள் அனைத்து நன்மைகளையும் பெற்று என்னை வந்து அடைவார்கள் என்றாள். அதனால் தான் இன்று வரை லலிதா சகஸ்ரநாமம் மிக சக்தி வாய்ந்த ஸ்லோகமாக கருதப்படுகிறது.


பக்தியோடு இதனைச் சொல்லி வர நோய்கள் விலகும். லலிதா என்றால் அழகு என்று பொருள். ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது ஸ்ரீ வித்யா என்று பொருள் படும். ஞான அறிவு கிட்டும். அனைத்து ஆத்மாவின் உள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும். அளவிட முடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும். உள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகை தான் என்று புரியும். சக்தி வழிபாட்டினை ஸ்ரீ என்ற எழுத்தின் மூலம் வழிபடுவது தான் ஸ்ரீ வித்யா. நமது இந்த பிரபஞ்சமே ஸ்ரீசக்கரம் தான்.மந்தர , ய்ந்தர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு. பிரம்ம வித்தையும் ஸ்ரீ வித்தையும் ஒன்றே. லலிதா சகஸ்ர நாமத்தினையும், ஸ்ரீவித்யாவையும் படிக்கப் படிக்க ஜாதி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. உயர் பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொள்வோர் அனைவரும் படிக்கலாம். இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும்.


உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் குழந்தை பாக்கியம் பெறுவர். அன்றாடம் சொல்வதால் தீமைகள் விலகும். பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவம் நீங்கும். அன்றாட நித்திய பூஜை முறைகளையும் அவரவர் குடும்ப வழி பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவம் நீங்கும். கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும். எதிரிகள் நீங்குவர். வெற்றி கிட்டும். பொன், புகழ், பொருள் சேரும். லலிதா சகஸ்ர நாமம் தினசரி சொல்வது ஒரு தவம். இறைவனுக்கு வேறு எதனையும் அளிக்க வழி இல்லை. எனினும் இந்த நாமத்தினை சொல்வதே போதும். தன்னம்பிக்கை கூடும். லலிதாம்பிகையே ஸ்ரீகாளி மாதா, துர்கா தேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய். ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது. படிக்க ஆரம்பித்தால் ஆயிரம் நாமத்தினையும் ஒரே நேரத்தில் முழுமையாக சொல்லிவிட வேண்டும்.

அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்து கொண்டு போன போது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். உபதேசம் பெற்ற அகத்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.


சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந் திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சம நிலை பெற்றது. இந்தக் கதை அனைவருக்குமே தெரிந்தது தான். ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க, அகத்தியர் மட்டும் தென்திசை போனார். அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்?

அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகத்தியர் என்பது தானே இதன் பொருள்? அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகத்தியர். அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார்.

ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகத்தியர் கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க வேண்டும்.

பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது. அகத்தியரும், அவரது மனைவி லோபா முத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுபவர்கள்

சகஸ்ரநாம நூல்களிலேயே தனித் துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா ஸஹஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. இவ்வளவு சிறப்புகள் பெற்று தன்னுள் அனைத்து தெய்வ சக்திகளையும் அடக்கியுள்ள லலிதா ஸஹஸ்ர நாமத்தை நாமும் கூறுவதால் வாழ்வில் சகல சந்தோஷங்களையும் அனுபவிக்கலாம். இந்த ஆடி மாதத்தின் அம்மன் வழிபாட்டினை லலிதா சகஸ்ர நாமத்துடன் ஆரம்பியுங்கள்.

ஜூலை 16ம் தேதி ஆடி முதல் நாள் தொடங்குகிறது. வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும், தெய்வீக மனம் கமழும் மாதமாம் ஆடி மாதத்தில் பக்தர்கள் சகல சௌபாக்கியங்களையும் பெற வேண்டும்.

ஆடி மாதத்தில் தவறவிடக் கூடாத சில முக்கியமான நாட்களையும் முக்கிய வழிபாடுகளையும் பக்தர்கள் பலன் பெறும் பொருட்டு இங்கே பதிவிட்டிருக்கிறோம்.

ஆடி வெள்ளி: ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு உகந்த நாளாகும். பார்வதி தேவியின் அவதாரமான 108 அம்மன்களுக்கும் இந்த நாள் சிறப்பு தரும் நாள். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு சென்று நெய் விளக்கேற்றி வேண்டினால் பெண்களுக்கு மாங்கல்ய ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வெள்ளியும் அம்மனுக்கு மஞ்சள் காப்பு நடைபெறும்.

ஆடி கிருத்திகை: ஆடி மாதத்தின் கிருத்திகை நாள் முருகனுக்கு உகந்த நாள். இந்த நாட்களில் அறுபடை கோவில்களிலும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து முருக பெருமானை வேண்டி வந்தால் நினைத்தது நடக்கும். கிருத்திகையின் போது முருகன் கோவிலுக்கு சென்று வேண்டி வருவது சிறந்த பலனை தரும்

ஆடி அமாவாசை: ஆடியில் வரும் ஒரே அமாவாசை நாள். இது இறந்த முன்னோர்களுக்கு உகந்த நாள். முன்னோர்களை இந்த அமாவாசை நாளில் வழிப்படுவதன் மூலம் அவர்கள் மோச்சமடைவர். மேலும் அவர்களது பரிபூரண ஆசீர்வாதங்களை பிள்ளைகள் பெற முடியும்.

ஆடி பூரம்: பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளுக்கு உகந்த நாள். இந்நாளில் பெருமாள் கோவில்களில் கன்னி பெண்கள் ஆண்டாள் பாசுரம் பாடினால் விரைவில் வரன் கைக்கூடும்.

ஆடி பெருக்கு: ஆடி மாதம் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் நுரை பொங்க ஓடும் நாள். இந்நாளில் நீர்நிலைகளில் விளக்கேற்றி மக்கள் வழிப்படுவர். இதன்மூலம் வீட்டில் இன்பமும், செல்வமும் ஆண்டுதோறும் நிறைந்திருக்கும் என்பது மரபு.

ஸ்ரீ வரலட்சுமி விரதம்: பிரம்மரின் துணைவியும், அஷ்ட லட்சுமிகளின் மூலமுமான மகாலட்சுமிக்கு விரதம் இருக்கும் நாள் இது. இந்த நாளில் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல் ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

ஆடி மாதம் என்பது இந்து மத தெய்வங்களை வழிபட முக்கியமான மாதமாகும். சில தமிழ் மாதங்கள் சைவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும், சில மாதங்கள் வைணவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும் இருக்கும். ஆனால் இரண்டு சமய தெய்வங்களுக்குமே உகந்த மாதம் என்றால் அது ஆடி மாதம்தான். தெய்வீகமான இம்மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் சரியான முறையில் வழிபாடு செய்தால் ஆண்டியை அரசனாக்கும் பூரண நலனும், செல்வமும் வீட்டில் நிலையாக பெருகி வளம் தரும்.

ஆடியின் மகத்துவத்தை அறிந்து இந்த நாட்களில் நம் மனதை தெய்வ சிந்தனைகளில் செலுத்தி, மன சுத்தியுடன் பூஜை முறைகளை க்ரமங்களுடன் செய்து, தெய்வ கடாட்சத்தினைப் பெறுவோம்.