Breaking News

தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளன – சிறீதரன்!

 


தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் அன்று மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன. இந்த நிலைமையைச் சீர்செய்ய தமிழ் தேசிய அரசியல் மறுசீரமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

கொள்கை ரீதியாக ஒன்றுபட்டுச் செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்தவாறு புலம்பெயர் தேசக் கட்டமைப்புகளுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்பதே இங்குள்ள ஒவ்வொருவரினதும் முதன்மைக் கடமையாகும்.

கடந்த எட்டுத் தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தமிழர்களின் சுதந்திரத்துக்காக, அவர்களின் இறையாண்மையை நிலை நிறுத்துவதற்காக, சிங்கள பௌத்த ஒடுக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக, இரத்தமும் சதையுமாக நடைபெற்று வருகின்ற போராட்ட வலியின் நீட்சியில் உருவான, ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான அரசியல் இயக்கங்களில் ஒன்றாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ள ‘தமிழ் மக்கள் கூட்டணியின்’ முதலாவது தேசிய மாநாட்டில் உரையாற்றக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை, காலத்தேவை கருதிய வரலாற்றுச் சந்தர்ப்பங்களில் ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.

இன்று தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன. இங்கு தான் உரிமை அரசியலை சலுகை அரசியல் வெல்கிறது. இந்த நிலைமையைச் சீர்செய்ய தமிழ் தேசிய அரசியல் மறுசீரமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும்.

கொள்கை ரீதியாக ஒன்றுபட்டுச் செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்தவாறு புலம்பெயர் தேசக் கட்டமைப்புகளுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்பதே இங்குள்ள ஒவ்வொருவரினதும் முதன்மைக் கடமையாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

எமது சிந்தனைகளை மீள் வடிவமைப்புக்கு கொண்டுவருவதன் மூலம் காலத்தின் வேகத்துடனும், பூகோள மாற்றங்களுடனும் எமது மக்களின் அபிலாசைத் தளங்களிலிருந்து தடம்புரளாது பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நெருக்கடிமிக்க சூழலை எளிதாகக் கையாள்வதாயின், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், புலத்திலிருந்தவாறு இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் உறவுகளும் ஒருங்குசேர தம் அரசியற் பயணத்தை முன்கொண்டு செல்வதற்கான எதிர்கால வழி வரைபடம் ஒன்றையும் அதுசார் கொள்கை வகுப்புகளையும் உருவாக்க வேண்டும்.

அத்தகையதோர் தளத்தில் நின்று எல்லாத் தரப்பினரையும் இணைத்துச் செயலாற்றுவதன் தேவையுணர்ந்த ஒருவனாக, அந்தத் தளத்தின் இணைப்புப்பாலமாக இருந்து என் எல்லா இயலுமைகளைக் கடந்தும் ஈழத்தமிழினத்தின் அரசியல் வேட்கையைச் சுமந்த பயணத்தின் பங்குதாரராக செயலாற்றுவதில் எனக்கிருக்கும் விருப்பையும், கடமையையும் நான் இவ்விடத்தில் வெளிப்படையாகவே பதிவு செய்கிறேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் தொிவித்தாா்.