நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் முடிவில்லை – சுமந்திரன்!
நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எனவும், விரைவில் மத்திய செயற்குழுவில் அது சம்மந்தமான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. அது தொடர்பில் எமது கட்சியின் அரசியல் குழு இணைய வழி ஊடாக ஒரு தடவை கலந்துரையாடப்பட்டது. மத்திய செயற்குழுவில் அது சம்மந்தமான தீர்மானம் எடுப்போம்.
ஒரு புறம் அரசாங்கம் தேர்தலை பிற்போட முனைப்பு காட்டுகிறது என்பதை அரசியலமைப்பில் 83 பி என்கின்ற உறுப்புரையை மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி கொடுத்ததில் இருந்தே தெரிகிறது.
அதைப் பற்றி விளக்கமாகவும் விபரமாகவும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். தேவையில்லாத ஒரு திருத்தத்தை வேண்டுமென்றே கொண்டு வந்து மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தலை பிற்போடுவதற்கான ஒரு சதி செய்யப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனுவை சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்யதுள்ளார். அது மூன்று நீதியரசர்கள் முன்பாக விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே கடந்த திங்கள் கிழமையும் அப்படியான மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
5 நீதியரசர்கள் குழு முன்னிலையில் நடந்தது. அந்த வழக்கில் நானும் ஆஜராகினேன். அது அடிப்படையில்லாத மனு என்ன தெரிவித்து அதனை தாக்கல் செய்தவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழக்கு செலவும் செலுத்தும் படி உத்தரவிடப்பட்டது.
வழக்கு நிலுவையில் உள்ள போது அதனை பற்றி பேசக்கூடாது.
அத்தோடு, வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதன் காரணத்தினால் தமிழரசுக் கட்சி செயற்பட முடியாமல் இருகிறது. நீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கிறது. கட்சியினுடைய சின்னத்தை பாவிக்க முடியாமல் இருக்கிறது. தேர்தல் வந்தால் என்ன செய்வார்கள் என்றெல்லாம் பலர் நீலிக்கண்ணீர் வடிக்கின்ற விடயம் நடந்து கொண்டிருக்கிறது. இதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
கட்சி முடக்கப்படவில்லை. கட்சியினுடைய செயற்பாடுகள், சின்னம் எதுவும் முடங்கவில்லை. கட்சி முழுமையாக செயற்பட்டுக் கொண்டே இருகிறது. கட்சியின் சின்னத்தின் கீழ் எந்த தேர்தலையும் நாம் சந்திக்க முடியும். அதற்கு எந்தவிதமான இடர்பாடுகளும் கிடையாது.
இலங்கை தமிழரசுக் கட்சி உயிர்போடு இருப்பதுடன், ஒரு ஆக்கபூர்வமான பிரதிநிதிகளுடன் தொடர்ந்தும் பயணிக்கிறது. எதிர்வரும் எந்த தேர்தலில் கட்சி போட்டியிடும். மக்களுக்கான தனது செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கும்” என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தொிவித்தாா்.