Breaking News

எட்டாம் நாள் அகழ்வில் இரண்டு மனித எச்சங்களும், துப்பாக்கி சன்னங்களும் மீட்பு!

 


முல்லைத்தீவு  கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வின், எட்டாம் நாள் செயற்பாடுகள் நேற்று (12) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்றைய ஆய்வில் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கபட்டுள்ளதுடன் தகடு ஒன்றும், துப்பாக்கி சன்னங்களும், விடுதலைபுலிகளின் சீருடைகளும்  மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது நேற்றுடன் 45 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல்  பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் , முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன்  எட்டாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தன.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் உத்தியோகத்தர் மத்தீவ் கின்சன் (Matthew Hinson) மற்றும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த , பணிப்பாளர் ஜெ.தற்பரன் உள்ளிட்டவர்களும் குறித்த அகழ்வு பணி இடத்தினை பார்வையிட்டு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.