Breaking News

தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம்! நிலாந்தன்!

 


தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம்

தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் ஒரு பேசுபொருள் என்ற கட்டத்தைக் கடந்து ஒரு செயலாக மாற்றமடையும் நிலைமைகள் படிப்படியாக வளர்ந்து வருகின்றன. கடந்த 22 ஆம் தேதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த ஒரு நிகழ்வில் ஏழு தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் “தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு ” என்று ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த மாதம் 29ம்தேதி வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.எனினும் அப்பொழுது கையெழுத்திடப்படவில்லை. கையெழுத்திடும் நிகழ்வை இம்மாதம் ஆறாம் தேதி ஒழுங்கு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.ஆனால் சம்பந்தரின் மறைவையொட்டி அந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அது கடந்த 22 ஆம் தேதி நடந்தது.

தமிழ்த் தேசிய அரசியலில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆகப் பிந்திய ஒரு பொதுக் கட்டமைப்பு அதுவாகும். இதற்கு முன் கட்சிகளின் கூட்டுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆனால் மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டெனப்படுவது இதுதான் முதல் தடவை.அதுவும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இணைவது என்பது இதுதான் முதல் தடவை. இந்தக் கட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தி உழைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அடுத்தடுத்த கட்டத்திற்கு கட்டமைப்பு ரீதியாக முன்னேறத் தொடங்கியுள்ளது என்று தெரிகிறது. ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராக இருந்தால் கட்சிகளும் மக்கள் அமைப்பும் ஒன்றாக உழைத்து அவருக்கு வாக்குத் திரட்டும் பொழுது என்ன நடக்கும்?

தமிழ் பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை பெருமளவுக்கு பெறுவாராக இருந்தால் அது தென் இலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளை சவால்களுக்கு உள்ளாக்கும். எந்த ஒரு தென் இலங்கை வேட்பாளரும் பெருமைப்படக்கூடிய பெரும்பான்மையைப் பெற முடியாத ஒரு நிலைமை தோன்றக்கூடும்.

ஏனென்றால் கிடைக்கும் செய்திகளின்படி தென்னிலங்கையில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நிறுத்தப்படும் நிலமைகள் காணப்படுகின்றன. ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின் வெற்றி குறித்த நிச்சயமின்மைகளை அதிகமாகக் கொண்ட ஒரு தேர்தல் இது. ஒரு மேற்கத்திய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் கூறியதுபோல, தேர்தல் முடிவுகளை எதிர்வு கூற முடியாதிருக்கிறது என்பது மட்டுமல்ல, ஊகிக்கவும் முடியாத ஒரு நிலைமை காணப்படுகிறது என்பது சரியானதுதான். ஏனெனில் ஒப்பீட்டளவில் யாருமே மிகப்பெரிய பெரும்பான்மையோடு வெல்வார் என்று கூற முடியாத அளவுக்கு நிலைமை காணப்படுகிறது. இப்படிப்பட்ட நிச்சயமின்மைகள் அதிகமுடைய ஒரு தேர்தல்களத்தில் தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களின் அதிகப்படியான வாக்குகளை கவர்வாராக இருந்தால் நிலைமை என்னவாகும் ?

தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டாலும் நிறுத்தப்படாவிட்டாலும் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்தான் ஜனாதிபதியாக வரப்போகிறார். ஆனால் தமிழ் வாக்குகள் அவருக்கு இல்லை என்றால் முதலாவதாக அவர் பெறும் வெற்றியின் அந்தஸ்து குறைந்து விடும். எவ்வாறெனில் தமிழ் மக்களின் ஆணை அவருக்கு இல்லை என்பது அவரை நாடு முழுவதுமான ஜனாதிபதி என்ற அந்தஸ்திலிருந்து தரமிறக்கும்.

இரண்டாவதாக தமிழ் மக்களின் வாக்குகள் பெருமளவுக்கு அவருக்கு கிடைக்காவிட்டால் அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் குறையும். அதுவும் அவருடைய அந்தஸ்தை, அங்கீகாரத்தை குறைக்கும்.

எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் அதிகளவு வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் இந்த ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்படப் போகும் எந்த ஒரு ஜனாதிபதியும் அங்கீகாரம் குறைந்த;அந்தஸ்து குறைந்த ஒரு ஜனாதிபதியாகத் தான் காணப்படுவார்.அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சிகள் பெறக்கூடிய வெற்றி தோல்விகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை அதிகமாகக் கவர்ந்தால், தென்னிலங்கையில் பலம் குறைந்த ஒரு அரசுத் தலைவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்.அதேசமயம் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்படாவிட்டால் என்ன நடக்கும் ?

தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறும். ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார், ஆங்கிலம் பேசும் படித்த தமிழ் நடுத்தர தர்க்கம் தன்னை ஆதரிக்கும் என்று. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை அவர் மீட்டிருப்பதாக ஆங்கிலம் பேசும் படித்த நடுத்தர வர்க்கத் தமிழர்கள் கருதுவார்களாக இருந்தால், அவர்கள் ரணிலுக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும்.

அதேபோல சஜித்தோடு ஏதாவது ஒரு உடன்படிக்கைக்கு வர விரும்பும் கட்சிகள் தனது வாக்காளர்களை சஜித்தை நோக்கி சாய்ப்பாபார்களாக இருந்தால், சஜித்துக்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும். தென்னிலங்கை வேட்பாளர்கள் தமது வாக்குறுதிகளை வெளிப்படையாக முன்வைத்தபின் அவர்களோடு பேசலாம் என்று காத்திருக்கும் கட்சிகள்,தமிழ் மக்களின் வாக்குகளை யாரோ ஒரு தென் இலங்கை வேட்பாளரை நோக்கித்தான் சாய்க்கப் போகின்றன.எனவே சஜித்,ரணில் போன்ற வேட்பாளர்கள் அவ்வாறான எதிர்பார்ப்புகளோடு இருக்க முடியும்.

அடுத்ததாக, அனுர.மாற்றத்தை விரும்புகிறவர்கள் முன்னைய தலைவர்களில் சலித்துப் போனவர்கள், அனுரவை எதிர்பார்ப்போடு பார்க்கக்கூடும். அதனால் அவருக்கும் ஒரு தொகுதி தமிழ் வாக்குகள் கிடைக்கலாம்.

இந்த மூன்று தென்னிலங்கை வேட்பாளர்களையும் தவிர பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்கின்றது.அதற்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கக்கூடும்.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்றால் தமிழ் வாக்குகள் மேற்கண்டவாறு சிதறும் நிலைமைகளை அதிகமாக ஏற்படும்.

இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக்கூட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தத் தவறினால் யாரோ ஒருவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று கூறிக்கொண்டு களமிறங்கத்தான் போகிறார். அவருக்கும் ஏதோ ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும்.இப்படிப்பார்த்தால் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்று சொன்னால்,தமிழ் வாக்குகள் முன்னெப்பொழுதையும்விட பல கூறாகச் சிதறும் ஆபத்தும் அதிகம் தெரிகிறது. அதாவது தமிழ்ப் பலம், தமிழ் அரசியல் சக்தி பல துண்டுகளாகச் சிதறப் போகின்றது.

இது அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.ஜனாதிபதித் தேர்தலில் சிதறடிக்கப்பட்ட தமிழ் வாக்குகள் அடுத்தடுத்த கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் மேலும் சிதறடிக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குகளை ஒன்றுதிரட்டத் தவறினால்,தொடர்ந்து நடக்கக்கூடிய ஏனைய மூன்று தேர்தல்களிலும் தமிழ்மக்கள் மேலும் சிதறடிக்கப்படுவார்கள்.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தவிர வேறு புத்திசாலித்தனமான தீர்க்கதரிசனமான தெரிவு தமிழ்மக்களுக்கு உண்டா? அல்லது அதை மேலும் ஆழமான பொருளில் கேட்டால், ஐக்கியப்படுவதைத் தவிர வேறு உடனடி நிகழ்ச்சி நிரல் தமிழ் மக்களுக்கு உண்டா?

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் ஐக்கியம் நிரூபிக்கப்பட்டால்,அது அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்லப்படும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு பொதுநிலைப்பாட்டின் கீழ் ஒன்று திரட்டப்பட்டால், தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகம் பிறக்கும்; உத்வேகம் பிறக்கும். இது தமிழரசியலில் ஒரு புதிய ரத்தச் சுற்றோட்டத்தை ஏற்படுத்தும்.

கடந்த பல தசாப்தங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கும் ஓர் உண்மை எதுவென்றால், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வாக்களிப்பு அலை தோன்றும் போதுதான் அதிகப்படியான ஆசனங்கள் கிடைக்கின்றன.தமிழ் வாக்களிப்பு அலை எனப்படுவது அதன் பிரயோக அர்த்தத்தில் தமிழ்த் தேசிய அலைதான். தமிழ்த் தேசிய அலை என்பது அதை வேறு வார்த்தைகளில் சொன்னால் தமிழ் ஐக்கியம் தான்.

தேசியவாத அரசியல் எனப்படுவது அது எந்த தேசியவாதமாக இருந்தாலும், ஐக்கியம்தான்.எவ்வாறெனில்,தேசியவாத கட்சி அரசியல் எனப்படுவது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது.அதாவது ஆகக்கூடிய பெரும் திரளாக திரட்டுவது.அதை தேர்தல் வார்த்தைகளில் சொன்னால், வாக்காளர்களை ஆகக்கூடியபட்சம் திரட்டுவது.எனவே தமிழ்த்தேசிய வாக்களிப்பு அலை எனப்படுவது தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஐக்கியப் படுத்துவதுதான்.

அந்த அடிப்படையில்தான் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் சிந்திக்கப்படுகிறது.கடந்த திங்கட்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் எழுதப்பட்ட உடன்படிக்கையில் 7கட்சிகள் கையெழுத்திட்டன.உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி முடிவெடுக்க முடியாதபடி இரண்டாக நிற்கின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கின்றது.

தமிழ்ப் பொது வேட்பாளரைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு அணிகள் உண்டு.சிறீதரன் அணி பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. சுமந்திரன் அணி எதிர்க்கின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட காணொளி ஊடகம் ஒன்று மாவை சேனாதிராஜாவை நேர்கண்ட பொழுது,அவர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகப் பதில் சொல்லியிருக்கிறார்.தமிழ்ப் பொது வேட்பாளரை நியாயப்படுத்தும் பொழுது, அவர் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டியுமிருக்கிறார்.மக்களிடம் ஆணை பெறுவது என்பதை விடவும்,மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும்; கட்சிகளை ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற பொருளில் அவருடைய பதில் அமைந்திருந்தது.மாவை சேனாதிராஜாதான் இப்பொழுதும் கட்சியின் தலைவர். எனவே அவருடைய கருத்துக்கு இங்கு அதிகம் முக்கியத்துவம் உண்டு. அது தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் சிறீதரன் அணியைப் பலப்படுத்தக் கூடியது.

இப்பொழுது ஏழு கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கியிருக்கும் பொதுக் கட்டமைப்பானது ஏனைய கட்சிகளுக்காகத் திறக்கப்பட்டிருக்கும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.அதன்மூலம் ஆகக்கூடியபட்ச ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதுதான் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம் என்று கூறப்பட்டிருக்கிறது.இந்த ஐக்கியம் வெற்றி பெறுமாக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் அரசியலை அது புதிய வழியில் செலுத்துமா?