எனக்கு உதவி செய்யுங்கள்... வெங்கல் ராவ் உருக்கம்!
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். சண்டை பயிற்சி கலைஞராக சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய வெங்கல் ராவ் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வடிவேலு நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்டார் வெங்கல் ராவ்.
இந்நிலையில், ஒரு கை மற்றும் ஒரு கால் வேலை செய்யவில்லை என்றும் பேசக் கூட முடியாமல் கஷ்டப்படுகிறேன். சினிமா நடிகர்கள் உதவி செய்யுங்க என வெங்கல் ராவ் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை அதிர்க்குள்ளாக்கியுள்ளது.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள் தொடர்ந்து நலிவடைந்து வருவதும், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணமின்றி அவதிப்பட்டு திரையுலகை சேர்ந்தவர்களிடம் உதவி கேட்பதும் அதிகரித்து விட்டது.
வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் போண்டா மணி. இலங்கையை சேர்ந்த இவர் தமிழகம் வந்து பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர். சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது சிகிச்சைக்கு உதவும் படி கோரிக்கையும் வைத்தார்.
அவருக்கு விஜய் சேதுபதி உள்ளிட்ட சிலர் உதவினார்கள். ஆனாலும், அவர் உயிரிழந்தார். அதேபோல், நடிகர் அல்வா வாசுவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நடிகர் பாவா லட்சுமணனும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு KPY பாலா உட்பட சிலர் உதவினார்கள்.
இந்த நிலையில், நடிகர் வெங்கல் ராவ் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.