அபிவிருத்தியின் பலன்களை மக்கள் அனுபவிக்க வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
வடக்கில் யுத்தம் காரணமாக வீடுகள், உடைமைகள், காணிகளை என அனைத்தையும் விட்டு வெளியேறியிருந்த மக்களுக்கு, முதல்
தடவையாக இலவச காணி உரிமையுடன் சுபீட்சமாக வாழும் சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னாருக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, காணி உறுதிப்பத்திரங்களை வழங்கியிருந்ததுடன் மேலும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்
நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கான “உறுமய” என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கான, காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த தேசிய திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றில் 442 உறுதிகள் இன்று ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தொிவித்த ஜனாதிபதி, கடந்த மாதம் வடக்கிற்கு வந்த போது மன்னாருக்கு வருவதாக நான் உறுதியளித்தேன்.
மன்னாரின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. வடக்கு பிராந்தியத்தில் சுமார் 90 ஆயிரம் குடும்பங்கள் காணி உரிமை கோருகின்றனர்.
45 ஆயிரம் குடும்பங்களுக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி அவை வழங்கப்படும்.
ஆனால் ஏனைய 45 ஆயிரம் குடும்பங்களுக்கும் வழங்க விரைவான நடவடிக்கை எடுக்குமாறு நான் ஆளுநருக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன்.
நாடு திவாலான நிலையில் இருந்து நாடு மீண்டு வரும்போது அதன் பலன்களை நாம் மக்களுக்கு வழங்க வேண்டும்.
மேல் மாகாணத்தில் உள்ள இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமையை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பொருளாதாரச் சரிவிற்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் முடிந்த அளவு உதவிகளை செய்து வருகிறது.
கடந்த காலத்தில் யுத்தம் காரணமாக வடக்கு மக்கள், வீடு, உடைமை, காணிகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
வாழ்நாளில் முதல் தடவையாக இலவச காணி உரிமையுடன் சாதாரணமாக வாழும் சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளது.
அப்போது நீங்களும் நாடும் பொருளாதார ரீதியாக முன்னேற வாய்ப்பு கிடைக்கும்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தொிவித்துள்ளாா்.