இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன் - ஜனாதிபதி !
கொரோனாக் காலத்தில் இஸ்லாமியர்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு மன்னிப்புக் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது ‘அடக்கம் செய்தல் மற்றும் கொரோனா தொற்று நோயின்போது இடம்பெற்ற விடயங்கள் என்ன என்பது பற்றி நிறைய கலந்துரையாடல்களும் மனவேதனைகளும் ஏற்பட்டன என்பது உங்களுக்குத் தெரியும்.
அந்த விடயத்தில் நானும் தலையிட்டேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? முதலில், அனைத்து நாடுகளும் அடக்கம் செய்வதை நிறுத்தியது. அதன் பிறகு, உலக சுகாதார நிறுவனத்திடம் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது. ஆனாலும் இலங்கையில் நாங்கள் ஒரு குழுவை நியமித்தோம்.
துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று குழு பரிந்துரைத்தது. உலக சுகாதார நிறுவனம் வேறுபட்ட கருத்தை எடுத்தது. ஆனால் பின்னர் உயர் நீதிமன்றம் அந்தக் குழுவின் பரிந்துரையை உறுதி செய்தது. எனவே அதை அரசாங்கம் பின்பற்ற வேண்டியேற்பட்டது.
அப்போது மாற்று வழி இருக்கவில்லை. ஆனால் இப்போது அவை அனைத்தும் முடிந்துவிட்டது. மேலும், இவை அனைத்தையும் நாம் எதிர்கொண்டோம். இந்த நாட்டில் அடக்கம் செய்வதா அல்லது எரிக்கப்படுவதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும்.
எனவே, இறந்தவரின் உடலை புதைக்கவோ, தகனம் செய்யவோ அல்லது மருத்துவ பீடத்திற்கு தானமாக வழங்கவோ உரிமை வழங்கும் சட்டத்தை இவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கொண்டு வரவுள்ளார். இந்த காலக்கட்டத்தில், முக்கியமாக இஸ்லாமிய மக்களுக்குப் மனரீதியிலான பாதிப்புகள் ஏற்பட்டன.
எனக்கு தெரிந்த இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் இறந்த பிறகு அடக்கம் செய்வதை விரும்புகிறார்கள்.
எனவே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்’ இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.