பொது மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள கோரிக்கை!
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் உள்ள ஒவ்வொரு கிராமம், நகரம், சிறிய நகரம் மற்றும் குக்கிராமம் என அனைத்து இடங்களிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 20 இலட்சம் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். ஒன்பது மாகாணங்களிலும், 25 மாவட்டங்களிலும் பிரதேச செயலகம் மற்றும் உப பிரதேச செயலகம் 341 இலும், கிராம உத்தியோகத்தர் பிரிவு 14021 இலும், 51000 கிராமங்களில் வசிக்கும், இநாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களில் பெரும்பான்மையான மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப அணிதிரளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார்.
நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய, வறுமை இல்லாத நாட்டை உருவாக்க, தொழில்மயமாதல் விரிவாக்கமடையும், பொருளாதார வளர்ச்சி துரிதமாக அதிகரிக்கும், அதன் பலன்களை அனைவரும் பகிர்ந்துகொள்ளும் நாட்டை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொள்ளுமாறு 220 இலட்சம் மக்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு 20 இலட்சம் புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் நாடளாவிய வேலைத்திட்டம் நேற்று (07) ஆரம்பமானது. இதன் கொழும்பு மாவட்டத்துக்கான வேலைத்திட்டம் நேற்று ஹோமாகம நகரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பமானது.
ஐக்கிய மக்கள் சக்தியில் கட்சி அங்கத்துவத்தைப் பெறாத 20 இலட்சம் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் நேற்று முதல் 16 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
சகல தேர்தல் தொகுதிகளிலும் அந்தந்த தேர்தல் தொகுதிகளின் பிரதான அமைப்பாளர்களின் தலைமையில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.