ரஜினி படத்துக்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படம் "கூலி" .இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படம் தங்க கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் ரஜினி 'மாபியா' ''டான்" வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியுடன் பிரபல இந்தி நடிகர்கள் ரன்வீர் சிங், நாகார்ஜுனா, நடிகை ஷோபனா ,ஸ்ருதி ஹாசன் , நடிப்பதாக தகவல் வெளியானது. இப்படத்தின் 'சூட்டிங்' வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
இப்படத்தின் முதல் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதில், நடிகர் ரஜினிகாந்த் இரு கைகளிலும் கைகடிகாரத்தால் ஆன விலங்கை கட்டியிருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன் அந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியானது. அதில், இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த 'தங்கமகன்' படத்தில் இடம்பெற்ற "வா வா பக்கம் வா" பாடலின் இசையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது
தான் இசையமைத்த பாடல்கள் முழுவதும் தனக்கு தான் சொந்தம் என்றும் தனது பாடல்களை அனுமதி இல்லாமல் மேடைகளில் பாடக்கூடாது என்றும் மற்ற படங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் ஏற்கனவே இளையராஜா கூறி இருந்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தற்போது இது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.