தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு! நிலாந்தன்!
தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு யாராலோ இயக்கப்படுகிறது என்று ஒரு சந்தேகத்தை சில கட்சிகளும் சில ஊடகங்களும் பெரிதாக்கி வருகின்றன.மேற்படி சிவில் சமூகங்களின் கூட்டிணைவு வவுனியாவில் கூடிய பொழுது அந்தக் கூட்டத்துக்கு யாரோ நிதி உதவி வழங்கியிருப்பதாகக் கூறப்படுவது சரியா ?
சிவில் சமூகங்களின் கூட்டிணைவைச் சேர்ந்தவர்கள் தரும் தகவல்களின்படி வவுனியா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் அங்கே ஓர் உண்டியல் வைக்கப்பட்டிருக்கிறது.அந்த உண்டியலில் கூட்டத்தில் பங்குபற்றிய அனைவரையும் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பைச் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.அக்கூட்டத்தில் பங்குபற்றிய மதத் தலைவர்களும் உட்பட பெரும்பாலான குடிமக்கள் சமூகப் பிரதிநிதிகள் தங்களால் இயன்ற பங்களிப்பை நல்கியியிருக்கிறார்கள். மண்டபத்துக்குரிய வாடகையைக் கூட ஒரு சிவில் சமூகப் பிரதிநிதிதான் வழங்கியிருக்கிறார்.அந்த உண்டியலில் சேர்க்கப்பட்ட தொகை மொத்தச் செலவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குக்குக் கிட்ட வரும் என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அந்தக் காசை யாரோ ஒரு வெளிநாடு வழங்கியதா என்ற சந்தேகம் சில தரப்புகளால் எழுப்பப்படுகிறது. இக்கேள்விக்கு பதிலாக சில கேள்விகளையே திருப்பி கேட்கலாம்.
முதலாவது கேள்வி இக்குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் அதற்குரிய ஆதாரங்களை வெளிப்படுத்துவார்களா?
இப்படிப்பார்த்தால் தமிழ் மக்களைப் பிரிக்கும் சக்திகள்தான் தாயகத்தில் பலமாகக் காணப்படுகின்றன.அப்படித்தான் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும். அங்கேயும் இறந்தவர்களை நினைவு கூரும் விடயத்தில் தமிழர்கள் இரண்டாகி நிற்கிறார்கள்.அதுமட்டுமல்ல இறந்தவர்களை உயிர்பிக்கும் விடயத்திலும் தமிழ் மக்கள் இரண்டாக நிற்கிறார்கள். தாயகத்தில் உள்ள தமிழ் மக்களை கலந்து பேசாமல் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் சில இமாலய பிரகடனத்தை வெளியிடுகின்றன.
இப்படியாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் தமிழர்கள் தொடர்ந்து பிரிக்கப்படுகிறார்கள். இத்தகைய பொருள்படக் கூறின் தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுவதற்குரிய சக்திகள் பலவீனமாக இருக்கின்றன என்று தான் கூற வேண்டும். அதனால்தான் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட வேண்டும்; தமிழ் சக்தியை ஒரு மையத்தில் குவிக்க வேண்டும்; தமிழ் பலத்தை ஒரு மையத்தில் குவிக்க வேண்டும் என்று குடிமக்கள் சமூகங்கள் கேட்கின்றன. அவ்வாறு தமிழ் மக்களை ஒரு மையத்தில் திரட்டுவது தமிழ் மக்களுக்கு நல்லதா கெட்டதா?
ஆனால் சில அரசியல்வாதிகள் கூறுகிறார்கள், அவ்வாறு தமிழ் மக்களைத் திரட்டும் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் ஏதோ ஒரு தூதரகம் அல்லது வெளிநாடு இருப்பதாக. இப்பொழுது மேலும் ஒரு அடிப்படைக் கேள்வியைக் கேட்கலாம். உலகில் ஒரு மக்கள் கூட்டத்தை -அது சிறியதோ பெரியதோ- ஆள நினைக்கின்ற அல்லது தோற்கடிக்க நினைக்கின்ற அல்லது கையாள நினைக்கின்ற வெளிநாடுகள் அந்த மக்கள் கூட்டத்தை பிரித்துப் பிரித்துக் கையாளுமா? அல்லது சேர்த்துக் கூட்டிக்கட்டிக் கையாளுமா?
அதற்கு ஆங்கிலத்தில் “டிவைட் அண்ட் ரூல்” என்ற கோட்பாடு உண்டு. எல்லாப் பேரரசுகளும் தமக்கு அருகே உள்ள சிறிய நாடுகளை பிரித்துத்தான் கையாண்டன. அப்படிப் பார்த்தால் ஒரு மக்கள் கூட்டத்தைக் கையாள முற்படும் எல்லா வெளித் தரப்புகளும் அந்த மக்கள் கூட்டத்தை எப்படி பல்வேறு கூறுகளாகப் பிரிக்கலாம் என்றுதான் சிந்திக்கும். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சில கட்சிகள் கூறுகின்றன, தமிழ் மக்களைப் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயல்படுவது ஒரு வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல் என்று. உலகிலேயே ஐக்கியம் அல்லது ஒற்றுமை எனப்படுவதனை ஒரு வெளிநாட்டுச் சதி என்று சந்தேகிக்கும் மக்கள் கூட்டமாக ஈழத் தமிழர்கள் மாறிவிட்டார்கள்.
2009 க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியலின் அடுத்த கட்ட வீழ்ச்சி இது. 2009க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியல் எனப்படுவது ஆறாக் காயங்களும் ஆறாத் துயரங்களும் நிறைந்த கொந்தளிப்பான ஒரு கூட்டு மனோ நிலை. கொந்தளிப்பான மனோநிலை காரணமாக தமிழ் மக்கள் யாரைத் தங்களுடைய பிரதிநிதிகளாகத் தெரிவு செய்கின்றார்களோ அவர்களையே மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்கள். தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள எல்லா தலைவர்களின் மீதும் பெட்டி கை மாறிய குற்றச்சாட்டு அல்லது மதுபானக் கடைக்கான லைசன்ஸ் வாங்கிய குற்றச்சாட்டு அல்லது தூதரகங்களிடம் மாதாந்தச் சம்பளம் பெறுவதான குற்றச்சாட்டு போன்ற பல்வேறு வகைப்பட்ட குற்றச்சாட்டுகளும் உண்டு. அப்படியென்றால் இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மீது வைத்துக்கொண்டு ஏன் அவர்களை தலைவர்களாக தெரிவு செய்தார்கள்?
கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் விமர்சனத்திற்கு இடமற்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜன வசியம் மிக்க தலைவர் என்று யார் உண்டு ? பதவியேற்ற புதிதில் விக்னேஸ்வரனுக்கு எதோ ஒரு ஜனவசியம் இருந்தது. ஒரு பண்பாட்டுத் தோற்றமும் இருந்தது. ஆனால் இப்பொழுது அது இல்லை. இப்பொழுது அரங்கில் ஜனவசியம் மிக்க தலைவர்கள் அனேகமாக இல்லை என்று ஒரு நிலை.
இந்த வெற்றிடத்தை மிக ஆழமாக வியாக்கியானம் செய்தால், தமிழ் மக்களை ஒன்று திரட்டி வழி காட்ட வல்ல கவர்ச்சியான தலைவர்கள் யாருமே இல்லை என்று பொருள். இது மிகவும் பாரதூரமான ஒரு வெற்றிடம். கடந்த 15 ஆண்டு காலத் தேர்தல் அரசியலானது தமிழ் மக்களை தங்களுடைய பிரதிநிதிகளை நம்பாத ஒரு மக்கள் கூட்டமாக ;ஒருவர் மற்றவரைச் சந்தேகிக்கும் ஒரு மக்கள் கூட்டமாக; எல்லாப் புதிய நகர்வுகளுக்கும் பின்னால் சூழ்ச்சி கோட்பாடுகளைத் தேடி அலையும் ஒரு மக்கள் கூட்டமாக மாற்றி விட்டதா ?
இவ்வாறு தமிழ் மக்கள் அவிழ்த்து விட்ட பாக்கு மூட்டையைப் போல சிதறிப் போவதைத் தடுப்பதற்காகத்தான் குடிமக்கள் சமூகங்கள் முதலில் ஒன்று திரண்டு வவுனியாத் தீர்மானத்தை நிறைவேற்றின.நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவதன் மூலம் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட வேண்டும் என்ற பெருவிருப்பத்தை சிவில் சமூகங்கள் வவுனியா தீர்மானத்தில் வெளிப்படுத்துகின்றன.
சிவில் சமூகங்களின் இந்த விருப்பத்தை உள்வாங்கி அரசியல் கட்சிகள் முதலில் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் களைந்து தங்களுக்கு இடையே விசுவாசமான ஐக்கியத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். அதன்மூலம் தமது வாக்காளர்கள் மத்தியில் தங்கள் மதிப்பையும் அந்தஸ்தையும் உயர்த்தி கொள்ள வேண்டும். அடுத்த கட்டமாக கட்சிக்காக வாக்கு சேர்ப்பதற்கு பதிலாக தேசத்துக்காக வாக்குச் சேர்க்கும் ஒரு கட்சி அரசியலைக் கட்டி எழுப்ப முன் வர வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் மக்கள் முழுமையான பொருளில் ஒரு தேசமாகத் திரள்வார்கள்.தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது நிலவும் அவநம்பிக்கைகளையும் கசப்பையும் வெறுப்பையும் குற்றச்சாட்டுகளையும் சூழ்ச்சி கோட்பாடுகளையும் தோற்கடிப்பதற்கு ஒரே வழி விசுவாசமான உருகிப் பிணைந்த ஐக்கியம்தான்.
அதை எந்த ஒரு வெளிநாடும் காசு கொடுத்துச் செய்யப் போவதில்லை. எந்த ஒரு அனைத்துலக அரசு சார்பற்ற நிறுவனமும் அதற்கு நிதி உதவி வழங்கப் போவதில்லை.அது ஒரு சதியல்ல அது ஒரு புரொஜக்ட் அல்ல.அது ஒரு பெருஞ் செயல்.அது தமிழ் மக்கள் தாங்களாகவே செய்ய வேண்டிய ஒன்று. அதைத் தமிழ் மக்களைத் தவிர வேறு யாருமே செய்ய முடியாது. அதைத் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் புத்திஜீவிகளும் ஊடகங்களும் மத நிறுவனங்களும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.
ஒரு காலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த உன்னதமான தியாகங்களையும் வீரச் செயல்களையும் செய்த ஒரு மக்கள் கூட்டம்தான் ஈழத் தமிழர்கள்.மகத்தான சித்தர்களையும் ஞானிகளையும் சான்றோர்களையும் அறிஞர்களையும் நிறுவன உருவாக்கிகளையும் கலைஞர்களையும் உற்பத்தி செய்த ஒரு மக்கள் கூட்டம்தான் ஈழத்தமிழர்கள். இப்பொழுது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இரண்டாம் தலைமுறையானது ஏனைய சமூகங்களைக் கூர்ந்து கவனிக்கவைக்கும் கவர்ச்சியான வெற்றிகளைப் பெறத் தொடங்கிவிட்டது.
தமிழ் மக்கள் பண்பாட்டுச் செழிப்பு மிக்கவர்கள். பண்பாட்டுச் செழிப்பு மிக்க ஒரு நடுத்தர வர்க்கத்தை கொண்ட மக்களை எந்தப் புறத்தியாரும் தோற்கடித்து விட முடியாது. பண்பாட்டுச் செழிப்பு மிக்க நடுத்தர வர்க்கத்தை கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தை இலகுவாக தோற்கடித்து விட முடியாது என்பதனை அமில்கார் கப்றால் போன்ற தேசியவாத சிந்தனையாளர்கள் அழுத்திக் கூறுகிறார்கள். பண்பாட்டு மறுமலர்ச்சியே விடுதலையின் திறவுகோல். தமிழ் மக்கள் மத்தியில் ஒரு புதிய பண்பாட்டு விழிப்பை ஏற்படுத்த வேண்டும். இப்போது நிலவும் அவநம்பிக்கைகள்,குற்றச்சாட்டுகள், சூழ்ச்சிக் கோட்பாடுகள் போன்றவற்றிலிருந்து தமிழ் மக்களை விடுவித்து, உருகிப் பிணைந்த ஒரு தேசமாகத் தமிழ் மக்களைக் கட்டியெழுப்ப வேண்டும். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் அரசியல் தெரிவானது அதைச் செய்யுமாக இருந்தால் கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்கள் பெற்ற மகத்தான வெற்றியாக அது அமையும்.