சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவு !
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை களமிறக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கவாதியான டி.பி. இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாவது” சுதந்திரக் கட்சியின் இந்த நிலைமைக்கு, அரசாங்கத்துக்கு சென்ற எமது கட்சியினர்தான் பொறுப்புக்கூற வேண்டும். நாம் அறிவித்ததைப் போன்று, அவர்கள் அன்று அரசாங்கத்துடன் இணையாமல் இருந்திருந்தால், இன்று நாம் தான் முன்னணிக் கட்சியாக இருந்திருப்போம்.
அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்பட்டுதான் அவர்கள் சென்றார்கள். இவ்வாறு செய்துவிட்டு, என்மீது குறைக்கூறிக் கொண்டிருக்கிறார்கள். காய்ந்த மரத்திற்கு யாரும் கல்லெறிய மாட்டார்களே. நான் ஒரு தடவை ஜனாதிபதியாக இருந்துவிட்டேன். இன்னொரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க மாட்டேன் என நான் பதவியேற்றபோதே தெரிவித்திருந்தேன்.
தற்போது விஜயதாஸ ராஜபக்ஷ மீதுதான் பலரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்தான் வேட்பாளராக எமது கட்சி சார்பாக களமிறங்குவார். எமது தரப்பிலிருந்து 11 பேர் அரசாங்கத்திற்கு சென்றார்கள். நாம் ஒரே ஒருவரை தான் எமது பக்கம் எடுத்தோம்.
அந்த நபர் தான் சிறப்பான நபராகவும் இருக்கிறார். எனவே, விஜயதாஸ ராஜபக்ஷவுக்கான முழுமையான ஆதரவை நாம் வழங்குவோம்” இவ்வாறு மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.