உக்ரைனின் கார்கில் நகரம் மீது ரஷியா டிரோன் தாக்குதல்!
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றின.
இந்த நிலையில் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியது. அந்த டிரோன்கள், கார்கிவ் நகரில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை தாக்கின.
இதில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடும் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து கார்கிவ் பிராந்திய கவர்னர் சினி ஹுபோவ் கூறும்போது, ஒஸ்னோவியன்ஸ்கி பகுதியில் உள்ள பொதுமக்களின் உள்கட்டமைப்பு மீது ரஷியா டிரோன் தாக்குதல்களை நடத்தியது. கீழே விழுந்த டிரோன்களால் பெரிய அளவில் தீப்பிடித்தது என்றார்.
இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷியா பதிவு செய்துள்ளது. மேலும் அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் ரஷியா வைத்துள்ளது.
இதுகுறித்து ரஷியாவின் டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ரஷிய உள்துறை மந்திரியின் தகவலின்படி, ரஷியாவின் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளார். ஆனால், வேறு எந்த தகவலும் இல்லை என தெரிவித்து உள்ளது.