Breaking News

மே18.2024 – நிலாந்தன்!

 மீண்டும் ஒரு நினைவு நாள் தமிழ் மக்களைக் கூட்டிக் கட்டியிருக்கிறது திரட்டி யிருக்கிறது.இம்முறையும் ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலை நோக்கித் திரண்டிருக்கிறார்கள்.விசேஷமாக பன்னாட்டு மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் அங்கே காணப்பட்டார்.கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தமிழ் அதிகாரி ஒருவரும் அங்கே காணப்பட்டார்.சுமந்திரனும் உட்பட செல்வம் அடைக்கலநாதன்,சித்தார்த்தன்,சிறீரீதரன்,கஜேந்திரன் முதலாய் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள்.மதகுருக்கள்,சிவில் சமூகப் பிரதிநிதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள் போன்றவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.ஈழத் தமிழர்களை பொருத்தவரை கட்சி பேதமின்றி,இயக்க பேதமின்றி,வடக்கு கிழக்கு என்ற பேதம் இன்றி,சமய பேதமின்றி,சாதி பேதமின்றி, தமிழ் மக்கள் ஒன்றாகக் கூடும் ஒரே நிகழ்வு மே 18 தான்.இந்த முறையும் அந்த நாளின் புனிதம்;அந்த நாளின் மகிமை தாயகத்தில் நிலைநாட்டப்பட்டது. அந்த நாளின் மகிமை என்பது எல்லாத் தமிழ் தரப்புகளும் அங்கே திரள்வதுதான்.

முள்ளிவாய்க்காலுக்கு வெளியே தமிழ் பகுதிகளெங்கும் பரவலாக நினைவு கூர்தல் நடந்திருக்கின்றது.கொழும்பிலும் நடந்திருக்கிறது.புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் வழமை போல பெருமெடுப்பில் நடந்திருக்கின்றது. எனினும்,விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரையும் அவருடைய குடும்பத்தவர்களையும் நினைவு கூர்வதா இல்லையா என்ற விடயத்தில் புலம்ம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் உடைவு தென்படுகின்றது.கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட ஆகப்பிந்திய உடைவு அது. தமிழ் மக்கள் இன்னும் எத்தனை துண்டுகளாக உடையப் போகின்றார்களோ?

தமிழர்கள் எத்தனை துண்டுகளாக உடைந்தாலும் நினைவு நாட்கள் அவர்களை திரட்டிக் கட்டி விடும் என்று அரசாங்கத்திற்கு தெரியும்.அதனால் தான் கிழக்கில் மே 18ஐ அனுஷ்டிக்க முற்பட்ட அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு எதிராக கடுமையான கெடுபிடிகள் ஏவி விடப்பட்டுள்ளன

ஆனால் வடக்கில் நிலைமை அப்படியல்ல. வடக்கில் மே 18ஐ அனுஷ்டிப்பதற்கு போலீசார் பெரிய அளவில் தடைகள் எதையும் விதிக்கவில்லை. சில இடங்களில் படைவீரர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்தியிருக்கிறார்கள். வடக்கில் கஞ்சி காய்ச்சுவதற்குத் தடைகள் இருக்கவில்லை.தமிழர் தாயகப் பகுதியில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவிலும் பரவலாகவும் கஞ்சி காய்ச்சப்பட்டது வடக்கில்தான்.பல்கலைக்கழக மாணவர்களும் உட்பட கட்சிகளும் செயற்பாட்டு அமைப்புகளும் சமூக நிறுவனங்களும் தாமாக முன்வந்து.தன்னார்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியைச் சமைத்துப் பரிமாறியிருக்கிறார்கள்.

ஆனால் கிழக்கில் போலீசார் அதைத் தடுக்க முற்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னரும் கூட, கிழக்கில் போலீசார் முள்ளிவாய்க்கால் கஞ்சி சமைப்பதை தடுக்க முனைந்தார்கள். சில இடங்களில் அடுப்பை கால்களால் தட்டி நெருப்பை அணைக்க முற்படுகிறார்கள். கடந்த ஆண்டும் மாவீரர் நாளை முன்னிட்டும் கிழக்கில் கெடுபிடிகள் அதிகமாகக் காணப்பட்டன.இந்த விடயத்தில், அதாவது நினைவுகளை அனுஷ்டிக்கும் விடயத்தில் அரசாங்கம் வடக்கை வேறாகவும் கிழக்கை வேறாகவும் கையாள்வதற்குக் காரணம் என்ன?

இரண்டு காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கிழக்கில் காலூன்ற முற்படுகின்றது.கடந்த ஆண்டு திலீபனின்நினைவு நாளின்போது, அந்தக் கட்சியானது ஒரு வாகன ஊர்தியை திருகோணமலை வழியாக எடுத்துச் சென்றபொழுது அந்த வாகன அணி தாக்கப்பட்டது. அதன் பின் மாவீரர் நாளை அனுஷ்டிக்க முயன்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.இம்முறையும் மே 18ஐ முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.அல்லது நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கிழக்கில் பலமடைவதை அரசாங்கம் தடுக்க முயற்சிப்பதை இது காட்டுகிறது. இது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் கிழக்கில் ஏற்கனவே பலமடைந்து வரும் பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்களைத் தொடர்ந்தும் பலப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.கிழக்கில்,கிழக்குமைய அரசியலை ஊக்குவிப்பதன் மூலம், வடக்கையும் கிழக்கையும் அதாவது தமிழர் தாயகத்தை உடைக்கலாம்.அதேசமயம், கிழக்குமையக் கட்சிகள் பெருமளவுக்கு முஸ்லிம்களுக்கும் எதிரானவை. அங்கே அக்கட்சிகளைப் பலப்படுத்தினால் கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுகளை மேலும் பகை நிலைக்குத் தள்ளலாம். அதன்மூலம் வடக்குக் கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம்களைத் தூண்டி விடலாம். அதாவது அரசாங்கத்தின் நோக்கம் மிகத்தெளிவானது.கிழக்கில் கிழக்குமையக் கட்சிகளைப் பலப்படுத்துவது. அதற்கு நினைவு கூர்தலை அங்கே அனுமதிக்கக்கூடாது.ஏனென்றால் நினைவு நாட்கள் தமிழ் மக்களை ஒன்றாக்கும் சக்திமிக்கவை .அவை வடக்கையும் கிழக்கையும் அதாவது தமிழர்களின் தாயகத்தை,தாயக ஒருமைப்பாட்டைப் பலப்படுத்தும் சக்தி மிக்கவை.எனவே வடக்கையும் கிழக்கையும் பிரிக்க நினைப்பவர்களைப் பொறுத்தவரை, நினைவு கூர்தலை கிழக்கில் அனுமதிக்கக் கூடாது.அதுதான் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றது.

ஆனால் கிழக்கில் நினைவு கூர்தலைத் தடுக்கும் அதே அரசாங்கம் இன்னொரு புறம்,உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றைப்பற்றி உரையாடுகின்றது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு எனப்படுவது நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்பு. நிலை மாறுகால நீதி எனப்படுவது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட முப்பத்தின் கீழ் ஒன்று ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பொறுப்பு.அதன்படி உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்புத்தான், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகும்.

ஆனால் நிலைமாறு கால நீதியின் கீழ் பாதிக்கப்பட்ட மக்கள் நினைவு கூரும் முழு உரிமையையும் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக நிலை மாறுகால நீதியின் நான்கு தூண்களில் ஒன்று ஆகிய “இழப்பீட்டு நீதி” என்ற பகுதிக்குள் அது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இழப்பீட்டு நீதியின் கீழ்,தமிழ் மக்கள் போரில் இனஅழிப்பு செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் உரிமையுடையவர்கள் ஆகும். தனிப்பட்ட முறையில் அல்லது கூட்டாக நினைவுச் சின்னங்களை நிறுவி நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் கிழக்கில் அது மறுக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் நல்லெண்ண முயற்சிகளை,நல்லிணக்க முயற்சிகளை தமிழ் மக்கள் ஏன் நம்புவதில்லை என்பதற்கு கிழக்கில் கடந்த வாரம் போலீசார் நடந்து கொண்ட விதம் ஓர் ஆகப்பிந்திய சான்று ஆகும்.

இதே அரசாங்கம் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கு ஒரு பொதுச் சின்னத்தை உருவாக்கும் நோக்கத்தோடு நிபுணர் குழு ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறது. அந்நிபுணர் குழு மாவட்டங்கள் தோறும் பயணம் செய்து மக்கள் கருத்துக்களை கேட்டது.தமிழ்ப் பகுதிகளில் அவர்களுக்கு கருத்துக்கூறிய அனேகர், பொது நினைவுச் சின்னத்தை நிராகரித்திருக்கிறார்கள். கொலை செய்தவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் ஒன்றாக நினைவு கூர முடியாது என்று தமிழ் மக்கள் மேற்படி நிபுணர் குழுவுக்குக் கருத்து கூறியிருக்கிறார்கள். அதாவது அரசாங்கம் நினைப்பதுபோல ஒரு பொது நினைவுச் சின்னத்தை உருவாக்குவது இலகுவானது அல்ல என்பதைத் தமிழ் மக்கள் நிபுணர்களுக்கு அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.அவ்வாறு ஒரு பொது நினைவுச் சின்னத்தை உருவாக்க முற்படும் அரசாங்கம் நினைவை ஒரு உணவின்மூலம் பகிர முற்படும் தமிழர்களைத் தடுக்கின்றது.

ஒர் உணவைப் பார்த்து அதாவது கஞ்சியைப் பார்த்து அரசாங்கம் பயப்படுகிறது என்றால் அதன் பொருள் என்ன? அந்தக் கஞ்சி கடத்தக்கூடிய அல்லது பேணக்கூடிய நினைவுகளைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது என்றுதானே பொருள் ?

“மக்கள் ஒன்றுகூடுவதன் மூலம் உணவைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் நோய் பரவும் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக”மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா கேள்வி எழுப்பியுள்ளார். அப்படியென்றால் ஏன் மே தினக்கூட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கேட்டுக்கொள்ளவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.வெசாக் கொண்டாட்டங்கள்,தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ள அவர்,இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் முயற்சிகளை ஜெனீவாவில் மற்றுமொரு தீர்மானத்தை தடுப்பதற்கான ஏமாற்று நடவடிக்கை என தமிழ்மக்கள் கருதுகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும்,இம்முறை நினைவு கூர்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிழக்கில் தமிழ் மக்களைப் பயமுறுத்தப் போதுமானவைகளாக இல்லை என்பதோடு, முக்கியமாக திருக்கோணமலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு முஸ்லிம் சட்டத்தரணிகள் தாமாக முன்வந்து உதவியிருக்கிறார்கள் என்பது இங்கு முக்கியமாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டியது. அரசாங்கம் நினைப்பதுபோல கிழக்கில் நிலைமைகளைக் கையாள முடியாது என்பதனை அது காட்டுகின்றதா?