Breaking News

பொதுவேட்பாளர் தொடர்பில் முடிவில்லை - சிவஞானம் ஸ்ரீதரன்!

 


தமிழரசுக் கட்சி நிர்வாக தெரிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வழக்காளி கோரும் நிவாரணங்களை வழங்கி வழக்கை முடிவுறுத்த கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பொது வேட்பாளர் விடயத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். 

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று (19) இடம்பெற்றது. இதன் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சியின் முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக மத்தியகுழு கூடி ஆராய்ந்திருந்தது. எமது கட்சிக்கு எதிராக திருகோணமலையில் தொடப்பட்ட வழக்கு தொடர்பாக பேசப்பட்டது. நீண்ட நேரம் அது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 

அந்த வழக்கை வழக்காளி கோருகின்ற நிவாரணங்களை வழங்கி, எமது கட்சியினுடைய நிலைப்பாடுகளையும் நிலைநிறுத்தி இதுவரை காலமும் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட யாப்பினுடைய அடிப்படை விதிகளின் திருத்தங்களுக்கு அமைய செயலாற்றி இருக்கிறோமோ அதனை வலியுறுத்தி யாப்பின் அடிப்படையில் திரும்பவும் தலைவர் தொடக்கம் அனைத்து பதவிகளையும் தெரிவு செய்வது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, வழக்கை கைவாங்குவதற்கான ஒரு முடிவாக எதிராளியாக இருக்கும் நாங்கள் வழக்காளி கோரும் நிவாரணங்களை வழங்கி கட்சியை நாங்கள் எமது கைகளுக்கு  கொண்டு வருகின்ற முயற்சியை எடுத்துள்ளோம். இந்த விடயம் தொடர்பாக கையாள்வதற்கு ஜனாதிபதி சட்டத்திரணியும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான கே.வி.தவராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை நியமித்துள்ளோம். 

முதலாவது வழக்கிலேயே வழக்காளி கோருகின்ற நிவாரணங்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளோம். இதில்சில விடயங்களை தவறவிட்டுள்ளோம். அதனை சமர்பணங்கள் மூலம் சமர்பித்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து கட்சியை முன்னெடுப்பதாக தீர்மானித்துள்ளோம். அதன் அடிப்படையில் தற்போது கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா அவர்களும், செயலாளாராக மருத்துவர் சத்தியலிங்கம் அவர்களும் தொடர்ந்தும் தொழிற்படுவர். வழக்கு முடிவுற்ற பின்னர் புதிய நிர்வாக தெரிவு இடம்பெறும். 

இரண்டாவது விடயமாக பொது வேட்பாளர் தொடர்பாக பேசப்பட்டது. அங்கத்தவர்கள் இது தொடர்பில் தமது கருத்துக்களை பதிவு செய்தார்கள். சாதகமான, பாதகமான பல்வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. கட்சியின் பெரும் தலைவர் சம்மந்தன் ஐயா, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் கருத்துகளையும் கேட்டறிந்து பரிசீலித்தோம். எல்லோருடைய கருத்துக்களையும் ஒரு ஆலோசனைக்காக எடுத்துள்ளோம். இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்தும் மத்திய செயற்குழு மற்றும் மாவட்ட குழுக்களுடன் பேசி சிறந்த முடிவை எடுப்போம் எனத் தெரிவித்தார்.