Breaking News

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகள் - பொலிஸாரின் அச்சுறுத்தல்!



 பொலிஸாரின் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் ஐந்தாவது நாளாகவும் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.


தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 ஆம் திகதி தொடக்கம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.

பொலிஸார் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி கஞ்சி பரிமாறுவதை தடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுத்தபோதிலும் தொடர்ந்தும் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இன்று (17) மட்டக்களப்பின் நுழைவாயிலான பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பத்திகாரி தலைமையிலான பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் கஞ்சி குடிப்பதற்காக வாகனங்களை நிறுத்தியவர்கள் அங்கிருந்து செல்லுமாறு பொலிஸாரினால் அச்சுறுத்தப்பட்டனர்.

பொலிஸாரின் செயற்பாட்டினை கண்டிக்கும் வகையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பொலிஸாருடன் முரண்பட்டதை காணமுடிந்தது.

இந்த நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான அருட்தந்தை க.ஜெகதாஸ்,மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன், தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் அருண்தம்பிமுத்து, தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி ஆர்.ஜெயபிரகாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது வீதியின் இரு மருங்கிலும் பொலிஸார் நிறுத்தப்பட்டு வாகனங்களில் வருவோர் கஞ்சி பருகுவதை தடுக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதும் கஞ்சி பரிமாறும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதனை மக்களும் வந்து பெற்றுச்செல்வதை காணமுடிந்தது.