பலத்த காற்று மற்றும் கனமழை தொடரும் வாய்ப்பு !
தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும்.
மேலும் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும்
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.