அக்டோபர் 7-ல் உங்கள் கண்கள் எங்கே இருந்தன: போட்டோ வெளியிட்டு இஸ்ரேல் கேள்வி?
இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது காசாவின் தெற்கு பகுதியில் எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. முழு அளவில் இல்லாத ஒரு குறைந்த அளவிலான தரைவழி தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. காசாவின் வடக்கு பகுதியில் வசித்து வந்த பாலஸ்தீனர்கள் ரஃபா நகரில் குவிந்துள்ளனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 13 லட்சம் மக்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஏவுகணைகள் தற்காலிக முகாம் மீது விழுந்தது. இதில் தற்காலிக முகாம் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் உலக நாடுகள் இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக காசா மீது அனைத்து கண்களும் என்ற வாசகத்துடன் போட்டோ ஒன்று வெளியானது.
இந்த போட்டோவை ஷேர் செய்து காசா மக்களுக்கு (பாலஸ்தீன மக்கள்) பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், ஏவுகணை தாக்குதலின்போது ஹமாஸ் வெடிப்பொருட்கள் தீப்பற்றி எரிந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் ஹமாஸ் முற்றிலுமாக ஒழிக்க இன்னும் ஏழு மாதங்கள் தாக்குதல் நீடிக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பப்படும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது உங்களுடைய கண்கள் எங்கே இருந்தன என்ற வாசகத்துடன் ஒரு குழந்தை முன் ஹமாஸ் பயங்கரவாதி துப்பாக்கியுடன் நிற்கும் போட்டோவை வெளியிட்டு இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது.
அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் 1200 பேரை கொலை செய்த ஹமாஸ், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தற்போது வரை இந்த தாக்குதலில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.