பொது வேட்பாளர் குறித்து விசேட சந்திப்பு : எம்.ஏ.சுமந்திரன்!
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொது வேட்பாளர் தொடர்பிலான முன்னெடுப்புக்களை முன்னெடுத்துவரும் சிவில் சமூக பிரதிநிதிகள், பத்தி எழுத்தாளர்கள் உள்ளிட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் என்னை நேரில் சந்தித்து கதைத்தார்கள்.
பொது வேட்பாளர் தொடர்பிலான எனது நிலைப்பாட்டை அவர்களுக்கு கூறினேன். அவர்களும், பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பிலான தமது கருத்துக்களையும் கூறினார்கள்.
பொது வேட்பாளர் தொடர்பில் பொது வெளியில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்வினை நடாத்தி ,அதில் ஆரோக்கியமான கலந்துரையாடலை நடாத்துவோம் என நான் தெரிவித்திருந்தேன். அதற்கு அவர்களுக்கும் சம்மதித்தர்கள்.
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி பொது வேட்பாளர் தொடர்பில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாது, இவர் அவரின் ஆள் இவரின் ஆள் என தாக்கி பேசாது தமது கருத்துக்களை முன் வைத்து ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் இடம்பெற்றால் மக்களுக்கும் தெளிவு கிடைக்கும்.
அதற்கவே அந்நிகழ்வை ஒழுங்கமைத்துள்ளேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.