Breaking News

வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன் கட்டுரை !

 


களுத்துறையில் ஒரு சுற்றுலாப் பயணி-அவர் ஒரு வெள்ளைக்காரர்- ஒரு தேநீர்க் கடையில் வடை சாப்பிடுகிறார்.அவரை கடைக்குள் உபசரித்து வடையோடு இரண்டு விதமான சம்பல்களையும் கொடுத்த அந்த கடையைச் சேர்ந்த ஒருவர்,அவரிடம் ஒரு வடைக்கும் ஒரு பால் தேனீருக்கும் மொத்தம் ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்.சுற்றுலாப் பயணிக்கு அந்தத் தொகை அதிகம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.அவர் அந்த வழியால் வரும் ஆட்களை மறித்து வடையின் விலை என்னவென்று கேட்கிறார்.அந்த வழியால் வந்த இரண்டு சிங்களப் பெண்கள் ஓரளவுக்கு ஆங்கிலம் கதைக்கிறார்கள்,அவர்களில் ஒருவர் அந்த வடையின் விலை 120 ரூபாய் என்று கூறுகிறார்.

 வெள்ளைக்காரர் உண்மையை கண்டுபிடித்து விட்டார் என்பதை அறிந்த கடைக்காரர் சிறு தொகையை திரும்ப கொடுக்கிறார். இந்த விடயம் “டிக்டொக்” காணொளியில் பரவலாகப் பகிரப்பட்டது. அதன் விளைவாக கடைக்காரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

ஏற்கனவே இது போன்ற மற்றொரு சம்பவத்தில் ஒரு சுற்றுலாப் பயணியை ஒரு கொத்துரொட்டி கடைக்காரர் அவமதிக்கின்றார். சம்பவம் நடந்தது கொழும்பு புதுக்கடையில். அங்கேயும் ஒரு இடியப்ப கொத்து என்ன விலை என்று கேட்டபோது கடைக்காரர் 1900 ரூபாய் என்று கூறுகிறார். சுற்றுலாப் பயணி அதை நம்பாமல் கேள்வி கேட்டபோது கடைக்காரர் சுற்றுலாப் பயணியை நோக்கி வாயை பொத்து என்ற சமிக்கையை காட்டுகிறார். அது சமூக வலைத் தளங்களில் பரவலாக வெளிவந்தது. விளைவாக கடைக்காரர் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்தார்கள்.

இந்த இரண்டு விடயங்களையும் முன்வைத்து, சமூக வலைத்தளங்களில் பகிடியாக ஒரு விடயம் பகிரப்படுகிறது. இனி சாப்பாட்டுக் கடைக்கு போகும் போது வீடியோவையும் ஓன் பண்ணிவிட்டு சென்றால் சாப்பாட்டுக் கடைக்காரர்கள் மரியாதையாக நடந்து கொள்வார்கள் நியாயமான விலையைகக் கூறுவார்கள் என்பதே அந்தப் பகிடியாகும்.