விசித்திரமான வடிவமைப்பால் வைரலான கார்!
உலகம் முழுவதும் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பயனர்களின் கவனத்தை ஈர்க்க இளைஞர்கள் பலரும் வித்தியாசமான செயல்கள் மற்றும் சாகசங்களை செய்து வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் சாலைகளில் விசித்திரமான வடிவமைப்புடன் சென்ற காரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கார் தலைகீழாக கவிழ்ந்து சக்கரங்கள் மேலே இருக்கும் நிலையில், காரை டிரைவர் வழக்கம் போல ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன. சக்கரங்கள் மட்டுமின்றி கார் எண் உள்பட அனைத்துமே தலைகீழாக இருக்கும் நிலையில், பார்ப்பதற்கு தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் காரை எப்படி ஓட்டி செல்கிறார்? என்று பயனர்கள் திகைப்படையும் வகையில் வீடியோ உள்ளது.
இன்ஸ்டாகிராமில் 36 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். சில பயனர்கள், வித்தியாசமான வடிவமைப்பிற்காக கார் உரிமையாளரை பாராட்டினர். அதே நேரம் சில பயனர்கள், பொது மக்களை குழப்பும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டனர்.