வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யுவன் ஷங்கர் ராஜா!
யுவன் இதுவரை 170 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். படங்களுக்கு மாஸ் பி.ஜி.எம் வடிவமைப்பதில் யுவன் திறம் பெற்றவர். மெலடி மற்றும் காதல் பாடல்களுக்கு இசையமைப்பதில் வல்லவர்.
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜயின் குரலில் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
எந்தளவு வரவேற்பு வந்ததோ அதே அளவு பாடலுக்கு எதிரான கமெண்ட்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. யுவன் ஷங்கர் ராஜாவையும் இசையமைப்பாளர் அனிருத்துடன் ஒப்பிட்டு பேசி பல மீம்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.
இந்நிலையில் இன்று யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் யுவனிடம் மன்னிப்புக் கேட்டு பதிவுகளை பகிர்ந்தனர். அவர் ஏன் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினார் என்ற தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில் யுவன் தற்பொழுது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் 'ஹலோ மக்களே உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி, நான் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகவில்லை அது வெறும் டெக்னிக்கல் எரர், என்னுடைய குழு அதை சரி செய்ய முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. நான் மீண்டும் இன்ஸ்டாகிராமிற்கு விரைவில் வருவேன். நன்றி " என பதிவிட்டுள்ளார்.