சிறார்களின் நலன் கருதி புதிய தீர்மானம்!
சிறார்களுக்கு உடலியல் ரீதியான தண்டனைகளை விதிப்பதை தடை செய்வதற்காக தண்டனைச் சட்ட கோவை மற்றும் குற்றவியல் வழக்குச் சட்டங்களை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெற்றோர்கள், சட்ட ரீதியான பாதுகாவலர்கள் அல்லது வேறு நபர்களின் பாதுகாப்பின் கீழுள்ள பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் ,உளவியல் வன்முறைகள்,காயப்படுத்தல்,புறக்கணித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் இருந்து பாதுகாப்பதற்காக பொருத்தமான அனைத்துச் சட்ட ரீதியான, நிர்வாக ரீதியான மற்றும் கல்வி ரீதியான நடவடிக்கைகள் அரச தரப்பினரால் மேற்கொள்ளப்பட வேண்டுமென சிறுவர் உரிமைகள் தொடர்பான சமுதாயத்தின் 19 இன் முதலாம் உறுப்புரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உடல் ரீதியிலான தண்டனைகள் உள்ளிட்ட துஷ்பிரயோகங்களுக்கும் வன்முறைகளுக்கும் பிள்ளைகள் அதிகளவில் இரையாகின்ற நிலைமை காணப்படுவதாக சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் குழு இலங்கை தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் ஆசிரியர் ஒருவரால் அடித்து தாக்கப்பட்டமையால் செவிப்புலன் இழந்த மாணவர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனுவின் உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம், ஆசிரியர் மற்றும் அரசியலமைப்பின் 11 ஆவது உறுப்புரையின் பிரகாரம் உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான உடலியல் தண்டனைகளை வழங்குவது பிள்ளை ஒருவருக்கு உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துமென விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், கொடூரமான அல்லது இழிவான உடலியல் மற்றும் உடலியல் அல்லாத தண்டனைகளின் கீழ் எந்தவொரு செயற்பாட்டையும் உள்ளடக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை துரிதமாக அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.
அதற்கமைய அனைத்துத் துறைகளிலும் உடலியல் தண்டனைகள் விதிப்பதை தடை செய்வதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி தண்டனைச் சட்டக் கோவை மற்றும் குற்றவியல் வழக்கு கோவைச் சட்டங்களை திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.