நடிகை திரிஷாவின் கேரவனை சூழ்ந்த ரசிகர்களால் பரபரப்பு!
தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இன்னுமும் நடிகை திரிஷா ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.
நடிகை திரிஷா தற்போது மலையாளம் மொழியில் தயாராகி வரும் ஐடென்டிட்டி என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் டோமினோ தாமஸ் நடித்து வருகிறார். மேலும் நடிகர் வினய் நடித்து வருகிறார். அகில்பவுல் படத்தை இயக்குகிறார்.
இதற்கான படப்பிடிப்பு ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த சிங்கம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதற்காக அந்த மில்லில் பல கோடி மதிப்பில் செட் அமைத்து நடிகை திரிஷா, நடிகர் டோவினோ தாமஸ் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் நடிகை திரிஷா பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இதை அறிந்து அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்தனர். நடிகை திரிஷா.. திரிஷா.. என்று கோஷம் எழுப்பினர். அப்போது படப்பிடிப்பு குழுவினர் தயவு செய்து படப்பிடிப்புக்கு தொந்தரவு செய்யாமல் இங்கிருந்து கலைந்து சென்று விடுங்கள் என்று கூறினர்.
ஆனால் ரசிகர்கள் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் திரிஷாவை பார்க்காமல் இங்கிருந்து கிளம்ப மாட்டோம் என்று திரிஷா கேரவனை சூழ்ந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து நடிகை திரிஷாவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் கேரவனில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை நோக்கி கையை அசைத்தார்.
திரிஷாவை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் திரிஷா.. திரிஷா என விண்ணை முட்டும் அளவுக்கு கோஷம் எழுப்பினர். பலர் தங்கள் செல்போனில் நடிகை திரிஷாவை படம் எடுத்துக் கொண்டனர். சில ரசிகர்கள் உற்சாக மிகுதியில் நடிகை திரிஷாவை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தனர். சிறிது நேரம் ரசிகர்களை பார்த்து கையசைத்த நடிகை திரிஷா மீண்டும் கேரவனுக்குள் சென்று விட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இன்றும் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.