Breaking News

பங்குனி உத்திரத் திருநாளின் தெய்வீக சிறப்புகள்!

 


இந்துக்களின் மிக முக்கிய தினங்களில் ‘பங்குனி உத்திரத் திருநாள்’. இது தெய்வீகம் நிறைந்த பல தத்துவங்களை கொண்ட விரத நாளாகும். சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை வரும் ஒவ்வொரு பௌணர்மியுடன் அல்லது அதனுடன் அண்மித்து வரும் பன்னிரண்டு நட்சத்திரங்களின் சீர் நிறைந்த பொன்னாட்களை புனித தினங்களாக அனுஷ்டிக்கும் வழக்கம், இந்துக்களின் பாரம்பரியங்களில் உண்டு. அந்த வகையில் தமிழ் மாதங்களில் இறுதி மாதமாகிய பங்குனியில், பன்னிரண்டாவது நட்சத்திரமான ‘பங்குனி உத்திரம்’அமையப்பெற்றது இறைவனால் அருளப்பட்ட ஓர் வரப்பிரசாத நிகழ்வாகும்.

தெய்வ அவதாரங்களின் பல விஷேட நிகழ்வுகள் நடைபெற்றது இப்பங்குனி உத்திர நாளில்தான். சிவன்-பார்வதி திருமணம் நடந்தேறியது இத்தினத்திலே. அசுரர்களின் கொடிய ஆளுமைமையை வேருடன் களைய முருகப்பெருமான் சமரை ஆரம்பித்தது இந்நாளிதான். இப்போரில் வெற்றி கண்ட வெற்றிவேலாயுதப் பெருமானுக்கு இந்திரன் தன் புதல்வியாகிய தெய்வானையை பரிசாக வழங்கி, திருமணக்கோலம் கொண்ட தினமும் இப்பங்குனி உத்திரநாளிலே ஆகும். 

முருகனின் அறுபடை வீடுகளிலும் பங்குனி உத்திரத் திருநாள் வெகு விமரிசையாக நடைபெறும். குறிப்பாக முருகனின் மூன்றாம் படை வீடான ஆவினன்குடி என்றழைக்கப்படும் பழனியிலும், மதுரைக்கருகே அமைந்ததுள்ள முருகவேலின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இப்பெருவிழா அமர்க்களமாக அனுஷ்டிக்கப்படும்.

பார்வதி பரமேஷ்வரன் திருமணம் கொண்டதும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ‘மீனாட்சி சுந்தரேஷ்வர’ ராக திருக்கல்யாணக்கோலக் காட்சி அருளியதும் இப்பங்குனி உத்திர நாளிலேதான். ராம காவியத்தில்  ஸ்ரீராமர்-சீதா, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்துருக்கனன்-ஸ்ருதகீர்த்தி ஆகியோரின் மணவிழா மிதிலை நகரில் மஹரிஷி விஸ்வாமித்திரர், ஜனகச் சக்ரவர்த்தி தலைமையில் நடந்ததும் இப்பங்குனி உத்திர திருநாளிலேதான்.

‘பலி விழா பாடல் செய் பங்குனி உத்தர ஒலி விழா’ எனும் அருட்பா திருஞானசம்பந்தர் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கே பலியென்பது பயனையும், ஒலியென்பது தளைத்தலையும் குறிக்கும். கோதை ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் பெருமானுடன் திருமணக்கோலம் கொண்டதுவும் இத்திருநாளிலே.  சிவனின் தவத்தைக் களைத்த மன்மதனை சிவனார் தன் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறியால் எரித்து சாம்பலாக்கினார். இதனால் ரதியானவள் சிவனை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்த நந்நாளும் இந்நாளே. ஸ்ரீமகாலட்சுமி அவதரித்த புனித தினமும் இத்தினமே.திருமாலின் நெஞ்சமதில்  லட்சுமி வாசம் கொண்ட நற்தினமும் ஓர் பங்குனி உத்திரமே. இதனால் ஸ்ரீ மகாவிஷ்ணுவிற்கு ‘ஸ்ரீனிவாசன்’ என்ற திருநாமமும் உண்டாயிற்று. பூர்வ ஜென்மத்தில் திருமாலின் புதல்விகளாக இருந்த  அமுதவள்ளி, சுந்தரவள்ளி ஆகியோர், மறு பிறவியில் தேவேந்திரனின் தெய்வத் திருமகள் தெய்வானையாகவும், வேடுவ குலத்தவனாகிய நம்பிராஜனின் மகள் குறமகள் வள்ளியாகவும் அவதரித்து, இருவரும் முருகனை அடைந்து, திருமணக்கோலம் பூண்ட நந்நாளும் இந்நாளே.

ஸ்ரீ சாஸ்தாவாகிய ஐயப்பன் அவதரித்த சிறப்புத் தினமும் இப்பங்குனி உத்தர நந்நாளே. குருஷேத்திரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் திருவாய் மலர்ந்து ‘பகவத்கீதை’ உரைக்க காரணகர்த்தாவாக விளங்கிய, வில்லுக்கோர் விஜயன் என்ற சொல்லுக்கே உரித்தான மாவீரன் அர்ஜுனன் பிறந்ததும் இத்தினத்திலே.

அழகு மிகு இருபத்தேழு தேவகன்னியர்களை சந்திரபகவான் மணம் கொண்டதும் இச்சிறப்பு நாளிலே.

லோபமுத்திரை எனும் கன்னிகையை, இறைவனின் ஆணைப்படி அகத்திய மாமுனிவர் மணம் செய்ததும் இப் பொன்னாளிலே. காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த நாளும் இந்நாளே. ரதி மன்மதன், தேவேந்திரன் இந்திராணி, நான்முகன் சரஸ்வதி ஆகிய இறையவதாரங்கள் மணக்கோலம் பூண்டதும் இப்பங்குனி உத்திர நந்நாளிலே. காஞ்சிப்பதியில் காமாட்சியானவள் ஆற்று மணலில் சிவனார் திருமேனியை லிங்கமாக வடிவமைத்து ஆலிங்கனம் செய்து சிவனை அடைந்ததும் ஓர் பங்குனி உத்திரமே.

இடும்பன் காவடி கொண்டு நடம் புரிய ஆரம்பித்த நிகழ்வு நடந்ததும் இத்தினத்தில் தான். மார்க்கண்டேயனை காப்பதற்காக காலனை சிவனார் தன் காலால் இடறி தன் பக்தனைக் காத்தருளிய நற்தினமும் இத்தினமே. தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கருகில் அருட் கோவில் கொண்டுள்ள நவக்கிரஹத் தலமான திங்களூரில், மூலவராக வீற்றிருக்கும் லிங்கேஷ்வரர் திருமேனியில் இப்பங்குனி உத்தரத்தன்று  சரியாக மாலை ஆறு மணிக்கு பூரணச்சந்திரனின்  ஓளி வந்து விழும் அபூர்வக் காட்சி வியப்பிற்குரியது. அன்றைய தினம் இக்காட்சியைக்  காண பக்தர் கூட்டம் அலைமோதும்.

பங்குனி உத்தரத்திருநாளில் பல தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதால் இந்நந்நாளுக்கு ‘கல்யான விரதத்திருநாள்’ என்ற பெயரும் உருவானது. மணவாழ்க்கையை எதிர் நோக்கும் ஆண்கள், பெண்கள் இல்வாழ்வில் பிரிந்தவர்கள் ஒன்று கூட இப்பங்குனி உத்திர நாளில் இறைவனை வேண்டி விரதமிருப்பின் இல்வாழ்க்கை சீர் கொண்டதாக அமையும் என்பது  ஐதீகம். 

இத்திருநாளில் பல ஆலயங்களில் தீர்த்தவாரி நடப்பது சிறப்புக்குரியது. கடல்,ஆறு,போன்ற நீர் நிலைகளில் இத்தினத்தில் புனித நீராடுவதனால் பெரும் நற்பலன் கிடைக்கும் என வேதங்கள் பறை சாற்றுகின்றன. இலங்கைத் திருநாட்டிலும் இவ்விழா பல ஷேத்திரங்களில் விஷேடமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை சிறப்புக்குரியது. குறிப்பாக மலையகப் பகுதியில் அம்மன் ஆலயங்களில் இப்பங்குனி உத்திர விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறது.