Breaking News

சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் கண்ணீருடன் அஞ்சலி!


மறைந்த சாந்தனின் உடல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் வைக்கப்பட்டு, வவுனியாவில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது, பொதுமக்கள் திரண்டு கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி காலமானார்.

இந்நிலையில். அவரது உடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் (01) எடுத்து வரப்பட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின் பின்னர், இன்று (03) காலை அவரது உடல் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் ஊர்வலமாக வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருக்கு மத்தியில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சாந்தனின் உடலானது மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.