Breaking News

பன்றியின் கிட்னியை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை!

 


அமெரிக்காவில், ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபர், கடந்த 11 வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், 2018-ம் ஆண்டு அவரின் 2 சிறுநீரகமும் செயல் இழந்தது. அப்போது மாசசூசெட்ஸ் Massachusetts மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் உயிர் பிழைத்தார்.

ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து ஐந்து வருடங்களுக்குள்ளாகவே மீண்டும் அவருக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. ஆகவே அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனையிலேயே அவருக்கு டயாலிஸஸ் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் உதவியால் உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனாலும் டயாலிஸ் சிகிச்சையும் ஓரளவிற்கு மேல் கைகொடுக்கவில்லை. அவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தார்.

அப்போது, மருத்துவர் டாட்சுவோ கவாய், தனது கடைசி முயற்சியாக நோயாளியான ரிக்ஸ்லாய்மென்னிடம், பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி பார்க்கலாம் என்று அனுமதி கேட்டுள்ளார்.

நோயாளியும் தனது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருந்ததால், மருத்துவரின் ஆலோசனைக்கு ஒத்துக்கொண்டார். இதனால், மருத்துவர்கள் குழுவானது இவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி, அதில் வெற்றி பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய, மருத்துவர் டாட்சுவோ கவாய், "பன்றியின் சிறுநீரகம் மனித சிறுநீரகத்தின் அளவை ஒத்ததாக இருக்கும். பன்றியின் இரத்த நாளங்களை நோயாளியின் இரத்த நாளங்களுடன் இணைக்கும் பொழுது, நாங்கள் எதிர்பார்த்தபடி உடனடியாக அது வேலை செய்ய ஆரம்பித்து, நோயாளியின் உடலிலிருந்து சிறுநீர் பிரிய ஆரம்பித்தது. இது எங்கள் ஆராய்ச்சி குழுவிற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முறை வெற்றிபெற்றால், பல நோயாளிகள் பலனடைவார்கள். விலங்குகளின் உறுப்புகளை மனிதனுக்கு மாற்றுதலால் உறுப்பு பற்றாக்குறை குறையும்" என்றும் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிக் ஸ்லாய்மெனின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இவர் வீட்டிற்கு திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது.