Breaking News

ராஜபக்சக்கள் ஏன் பொதுத் தேர்தலைக் கேட்கிறார்கள்? நிலாந்தன் கட்டுரை!

 


ஜனாதிபதி தேர்தலை நோக்கித் தமிழ்க் கட்சிகள் துடிப்பாக உழைப்பதாகத் தெரியவில்லை. அது தொடர்பில் முதலில் கருத்து தெரிவித்தது குத்துவிளக்கு கூட்டணியைச் சேர்ந்த சுரேஷ் பிரம்மச்சந்திரன். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் சில மாதங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தார். அதன் பின் அவரும் இணைந்திருக்கும் குத்து விளக்கு கூட்டணி, மன்னாரில் நடந்த கட்சிகளின் கூட்டத்தில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்று அறிவித்தது. அதற்கு ஆதரவாக விக்னேஸ்வரனும் கருத்து தெரிவித்திருந்தார். ஒரு பொது தமிழ் வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதே காலப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான் தேர்தலைப் பகிஸ்க்கரிக்கப் போவதாகக் கூறியது.

தமிழரசுக் கட்சி இன்று வரை தன் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறவில்லை. எனினும் சாணக்கியன் பொதுத் தமிழ் வேட்பாளருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார். கட்சித் தலைமைப் பீடத்துக்கான தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது என்பதனால் அக்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் உத்தியோகபூர்வமாக அதுதொடர்பாக கருத்து எதையும் தெரிவித்திருக்கவில்லை. கட்சித் தலைமைக்கான தேர்தல் முடிந்த பின்னரும் அது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க முடியாத ஒரு நிலைமை கட்சிக்குள் காணப்படுகின்றது. ஏனென்றால், ஒருமித்து உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை எடுக்க முடியாதபடி கட்சி நீதிமன்றத்தின் நிற்கின்றது.

இத்தகையதோர் பின்னணியில், அண்மையில், யாழ்ப்பாணத்தில், தந்தை செல்வா கலையரங்கில் ஒரு கருத்தரங்கு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டான் டிவியால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சிவில் சமூகம் அக்கருத்தரங்கை ஒழுங்கு படுத்தியது. “மக்கள் மனு” என்று பெயரிடப்பட்ட அக்கருத்தரங்கில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பாகவே பெருமளவுக்கு கருத்துக்கள் கூறப்பட்டன. கருத்தரங்கில் தமிழரசு கட்சித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட தலைவராகிய சிறீதரனும் பங்குபற்றினார். அவருமுட்பட அங்கு உரை நிகழ்த்திய பெரும்பாலான அரசியல் தலைவர்கள், ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்தார்கள்.

மக்கள் மனு என்ற பெயரிலான அந்த நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில் மேற்படி சிவில் சமூகமானது தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகளையும் சந்திக்க தொடங்கியுள்ளது.

ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தமிழரசுக் கட்சி ஆதரிக்கவில்லை என்றால் குத்துவிளக்கு கூட்டணி அதில் அதிகம் ஆர்வமாக இருக்காது என்று தெரிகிறது. தமிழரசுக் கட்சி ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை ஆதரிக்குமாக இருந்தால் அது ஒரு பலமான நகர்வாக மாறும் என்ற அபிப்பிராயம் குத்துவிளக்கு கூட்டணிக்குள் இருக்கும் சில கட்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் காணப்படுகின்றது. தமிழரசுக் கட்சி அதில் இணையவில்லை என்றால் அந்த கோரிக்கை பெருமளவுக்கு வெற்றி பெறாது என்பது மட்டுமல்ல, அதில் கிடைக்கக்கூடிய தோல்வியானது, சில சமயம் குத்துவிளக்குக் கூட்டணியின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்ற அச்சம் கூட்டணிக்குள் உள்ள சிலரிடம் உண்டு.

எனவே தமிழ் பொது வேட்பாளர் வெற்றி பெறுவாரோ இல்லையோ அதற்கு முன் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற கோரிக்கையின் வெற்றி என்பது பெருமளவுக்குத் தமிழரசுக் கட்சியின் முடிவில்தான் தங்கியிருக்கின்றது போலத் தெரிகிறது. தமிழரசு கட்சியோ தலைமைப் போட்டியால் தத்தளித்து கொண்டிருக்கிறது. ஒரு பொது முடிவை எடுக்க முடியாத கட்சியாக அது காணப்படுகின்றது. நீதிமன்றத்தில் இருந்து கட்சியை வெளியே எடுக்காதவரை ஒரு பொது முடிவை எடுக்க அவர்களால் முடியாது என்று தெரிகிறது.

இதுதான் தமிழ்த் தரப்பில் உள்ள நிலமை. அதே சமயம் சிங்களத்தரப்பைப் பொறுத்தவரையிலும் அங்கேயும் விளைவுகளை எதிர்வுகூற முடியாத ஒரு குழப்பமான நிலைமைதான் காணப்படுகின்றது. இப்போதுள்ள ஜனாதிபதி பொதுஜன பெரமுனவின் வாக்குப் பலத்தில் தங்கியிருப்பவர். ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷர்களின் பொது வேட்பாளர் ஆகவன்றி, தனித்து தன் சொந்தப் பலத்தில் நிற்பதற்கு அவர் தயாரில்லை என்று தெரிகிறது. உடைந்து போய் இருக்கும் அவருடைய கட்சியை ஒட்ட வைப்பது இன்றுவரை கடினமாகவே உள்ளது.எனினும்,ஜேவிபி என்ற இடதுசாரி கட்சிக்கு எதிராக முதலாளித்துவ அரசியல்வாதிகள் ஒன்றிணைக்ககூடிய வாய்ப்புகள் இப்பொழுதும் உண்டு.

ஜேவிபியின் எழுச்சி என்பது ஒரு விதத்தில் இடது மரபுக்கு எதிரான முதலாளித்துவக் கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடியது. ஜேவிபியின் வாக்கு வங்கி எழுச்சி பெறுகிறது என்ற மதிப்பீடு மிகையானது என்ற கருத்து ஒருபுறமிருக்க, அதுதொடர்பான பயம், அதற்கு எதிரான முதலாளித்துவக் கட்சிகளை ஒன்றிணைக்க வல்லது. 2022 இல் “அரகலய”வின் போது அதுதான் நடந்தது. மக்களின் தன்னெழுச்சியைக் கண்டதும் அரசியல் எதிரிகள் ஒன்றிணைந்தார்கள். மக்கள் தன்னெழுச்சியைத் தோற்கடிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்தி ராஜபக்சக்கள் அவருடைய மறைவில் பதுங்கிக் கொண்டார்கள்.

ஆனால் இப்பொழுது ராஜபக்சக்கள் தங்களை பலப்படுத்திக் கொண்டு விட்டதாக நம்புவதாகத் தெரிகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் அவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்று கொழும்பில் உள்ள ஊடக வட்டாரங்கள் கருதுகின்றன. அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பசில் ராஜபக்ச, ஒரு பொதுத் தேர்தலை முதலில் வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதன் பின் மகிந்தவும் அதை வலியுறுத்தினார். ஒரு பொதுத் தேர்தலில் மக்கள் விருப்பம் என்னவென்பது துலக்கமாகத் தெரியவரும். அதன்பின் ஒரு ஜனாதிபதித் தேர்தலை வைக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஜனாதிபதி தேர்தலை முதலில் வைத்தால் அதில் வெல்லக் கூடிய கட்சி அல்லது கூட்டு, அடுத்தடுத்த தேர்தல்களை வைத்துத் தன் வெற்றியை மேலும் உறுதிப்படுத்த விளையும். அதாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு ஒரு முற்கற்பிதமாக அமையுக்கூடும்.அது அடுத்தடுத்த தேர்தல்களில் மக்களுடைய வாக்களிப்பு மனோநிலையின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடும். மாறாக, பொதுத்தேர்தலை முதலில் வைத்தால் மக்கள் எந்த விதமான முன் முடிவுகளும் இன்றி சுயாதீனமாக வாக்களிப்பார்கள் என்று பசில் நம்புகிறாரா?.

ஆனால் அவர் அவ்வாறு கூறுவது, மக்களுடைய முடிவு சுயாதீனமாக வெளிப்பட வேண்டும் என்பதற்காக அல்ல. ரணிலுக்கும் தங்களுக்கும் இடையிலான பேரத்தில் தங்களுடைய பேர பலத்தை அதிகப்படுத்துவதற்காகத் தான். ஒரு பொதுத் தேர்தல் வைத்தால் நிச்சயமாக ரணிலுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கூற முடியாது. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதில் அவர் பெற்ற வெற்றிகள் எந்தளவுக்கு வாக்குகளாக மாறும் என்றும் எதிர்வு கூற முடியாது.

அதேசமயம் பொதுஜன பெரமுன நம்புகிறது, யுத்த வெற்றி வாக்குகள் தனக்கு இப்பொழுதும் கிடைக்கும் என்று.அவ்வாறு பொதுஜன பெரமுன ஒரு பொதுத் தேர்தலில் ரணிலை விட அதிக வாக்குகளை பெறுமாக இருந்தால், அது ரணிலுக்கும் அவர்களுக்கும் இடையிலான பேரபலத்தை மாற்றி அமைக்கும் என்று அவர்கள் கணக்குப் போடக் கூடும். எதுவாயினும், பொதுஜன பெரமுன தனது பேர பலத்தை அதிகப்படுத்த முற்படுகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் முதலில் வைக்கப்பட்டால் அதில் யார் வெல்ல கூடும் என்பதனை சரியாக கணிப்பிட முடியாத ஒரு நிலைமைதான் இப்பொழுது நாட்டில் காணப்படுகின்றது.

அது ஜேவிபியின் பலம் அதிகரித்து வருவதால் ஏற்பட்ட ஒரு நிச்சயமின்மை. எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு பலமான ஐக்கியம் ஏற்பட முடியாததால் வந்த ஒரு நிச்சயமின்மை. பொதுஜன பெரமுனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான பேர விளையாட்டு முடியாத காரணத்தால் வந்த ஒரு நிச்சயமின்மை.

அதாவது கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து தென்னிலங்கையில் பேரப் பேச்சுக்கள் முடிவுறாத காரணத்தால், நிலைமைகளைத் திட்டவட்டமாக எதிர் கூறுவது கடினமாக உள்ளது. அதே சமயம் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் ஸ்திரமற்ற, நிச்சயமற்ற நிலைமைகளைக் கையாண்டு தன்னுடைய பேர வாய்ப்பை அதிகப்படுத்தும் விதத்தில், ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கி விளையாடத் தமிழ்த் தரப்பு எந்தளவுக்குத் தயார்?