தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் அரசாங்கம்? நிலாந்தன்.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை அண்மையில் வெளிவந்தது.அதில் கூறப்பட்ட விடயங்கள் ஊடகங்களில் வெளிவந்தன.சில காணொளிகளும் அது தொடர்பாக வெளிவந்தன.அதற்கும் அப்பால் அது பற்றிய உரையாடல் பெரிய அளவில் நடக்கவில்லை. ஏனென்றால் தமிழ் மக்களுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் பல சோலிகள். எத்தனை விடயங்களைப் பற்றி தமிழ் மக்கள் சிந்திப்பது?
ஒருபுறம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தீர்வு இல்லை. இன்னொரு புறம் மேய்ச்சல் தரையை மீட்பதற்காக மட்டக்களப்பில் பண்ணையாளர்களும் செயற்பாட்டாளர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒப்பீட்டளவில் புதிய போராட்டம். அதற்கும் தீர்வு இல்லை. இவை தவிர இந்த மாதம் தொடக்கத்தில் சாந்தனின் உடல் நாட்டுக்கு வந்தது. அதன் பின் கடந்த சிவராத்திரி அன்று வெடுக்கு நாறி மலையில் பூசையில் ஈடுபட்டிருந்த மக்கள் மத்தியில் இருந்து எட்டுப் பேரை போலீஸ் கைது செய்தது.
இப்படி ஒன்றன்பின் ஒன்றாக ஏதாவது ஒரு புதுப் பிரச்சினை தோன்றிக் கொண்டேயிருக்கிறது. தமிழ் மக்களின் கவனமும் தமிழ் கட்சிகள், அரசியல் செயற்பாட்டாளர்களின் கவனமும், தமிழ் ஊடகங்களின் கவனமும் குறிப்பாக காணொளிக்காரர்களின் கவனம் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதிய விடயத்தின் மீது குவிக்கப்படுகின்றது. இது தற்செயலான ஒன்றா? அல்லது திட்டமிட்டு தமிழ் மக்களின் கவனம் அவ்வாறு திருப்பப்படுகின்றதா?
இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் பல விடயங்களில் ஒன்று,அரசாங்கம் புதிதாக உருவாக்க முயற்சிக்கும் சட்டங்கள் மற்றும் உருவாக்கிய சட்டங்கள் பற்றியதாகும். நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பான சட்டம், சிவில் சமூகங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டமூலம்.. போன்ற சட்டங்கள் மட்டும் சட்டமூலங்கள் தொடர்பாக தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் போதிய உரையாடல்கள் நிகழவில்லை.
குறிப்பாக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக சுமந்திரன் ஒரு வழக்கைத் தொடுத்தார்.அந்தச் சட்டம் ஏன் தமிழ் மக்களுக்கும் பாதகமானது என்பதை பற்றி பெரிய அளவில் தமிழ் அரசியல் அரங்கில் விவாதங்கள் நடக்கவில்லை. அது மட்டுமல்ல இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பான சட்டமூலம், அரசு சார்பற்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் போன்றவை தமிழ் மக்களையும் பாதிக்க கூடியவை. ஆனால் அவை தொடர்பாகவும் தமிழ் மக்களின் கவனம் பெரிய அளவில் ஈர்க்கப்படவில்லை.
ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு புனர்வாழ்வு அதிகார சபை தொடர்பான ஒரு சட்டத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியபோது அதில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் காணப்பட்டார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதிலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.
அம்பிகா சற்குருநாதன்-முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர்,இப்பொழுது ஐநாவில் ஒரு பொறுப்பான பதவியில் உள்ளார்- ஒரு காணொளியில் கருத்துத் தெரிவிக்கும் போது, மேற்படி சட்டங்களை வெள்ளை வானுடன் ஒப்பிடுகிறார். 2009க்கு முன்பு வெள்ளை வான் இருந்தது.அது தமிழ் மக்களை அச்சுறுத்தியது. இப்பொழுது அரசாங்கம் சட்டங்களைக் கொண்டு வருகிறது. அவற்றின் மூலம் தமிழ் மக்களை அச்சுறுத்துகின்றது என்று அவர் கூறியுள்ளார். மேற்படி சட்டங்கள், சட்டமூலங்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானவை. அவை தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் போதிய விவாதங்கள் நடக்கவில்லை.
இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். தமிழ் மக்களைப் பாதிக்கக்கூடிய சட்டமூலங்கள்,சாந்தனின் விவகாரம்,ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை, கிழக்கில் மேய்ச்சல் தரைக்கான போராட்டம், வடக்கில் மரபுரிமைச் சொத்துக்களை பாதுகாப்பதற்கான போராட்டம்.. என்றெல்லாம் பல்வேறு விடயப் பரப்புகளின் மீது தமிழ் மக்கள் கவனத்தைக் குவிக்க வேண்டி இருக்கிறது.
மேற்படி விவகாரங்கள் தொடர்பான போராட்டங்களில் சில அரசியல் செயற்பாட்டாளர்களையும் ஒரு சாமியாரையும் தொடர்ந்து எல்லாப் படங்களிலும் காணொளிகளிலும் காணமுடிகிறது.சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்பொழுது அடிக்கடி காணப்படுகிறார்கள். அண்மைக்காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களைக் காண முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவர்கள் மேச்சல் தரைக்காக போராடுவதற்கு என்று மட்டக்களப்புக்கு போனார்கள். திரும்பி வரும் பொழுது போலீசார் அவர்களைக் கைது செய்து சிறையில் வைத்தார்கள். அதன் பின் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களுக்கு வருவது குறைவு என்று ஒரு செயற்பாட்டாளர் சொன்னார்.
கடந்த சுதந்திர தினத்தன்று கச்சேரிக்கு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றவில்லை. அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் வரவில்லை என்றும் அவர் சொன்னார். சாந்தனின் உடலை யாரிடம் பொறுப்புக் கொடுப்பது. என்ற கேள்வி வந்தபொழுது, முதலில் பல்கலைக்கழக மாணவர்கள் அதற்குத் தயாராக இருந்தார்கள்.ஆனால் பின்னர் அவர்கள் அதைப் பொறுப்பேற்கத் தயங்கினார்கள் என்று ஒரு தகவல் உண்டு. அதனால் தான் அது வேறு அமைப்புக்களிடம் கொடுக்கப்பட்டது என்று நம்ப படுகின்றது.ஒரு கைது நடவடிக்கையோடு பல்கலைக்கழக மாணவர்கள் அச்சப்படும் நிலைமை தோன்றியிருக்கிறதா?ஆனால் இந்தப் போராட்டங்களில் அதிகமாகக் காணப்படும் சாமியார் இதுக்கு முன் கைது செய்யப்பட்டிருக்கிறார்; விசாரணைக்கு அழைக்கப்பட்டுமிருக்கிறார்.அவர் தொடர்ந்து போராட்டங்களில் முன்னணியில் காணப்படுகிறார்.
ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு இந்த மே மாதத்தோடு 15 ஆண்டுகள் ஆகின்றன.15 ஆண்டுகள் எனப்படுவது பெரிய காலம். இக்காலப் பகுதிக்குள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சிவில் சமூகங்களோ அல்லது மக்கள் அமைப்புகளோ தோன்றியிருக்கவில்லை. ஒரு குறுகிய காலம் தமிழ் மக்கள் பேரவை நொதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதுவும் பின்னர் இறந்து போய்விட்டது. இப்பொழுது கட்சிகள்தான் அரங்கில் நிற்கின்றன. இக்கட்சிகளும் கூட சிதறிக் கிடக்கின்றன. உள்ளதில் பெரிய கட்சி தமிழரசுக் கட்சி.அது யார் தலைவர் என்பதைத் தீர்மானிப்பதற்கு நீதிமன்றத்துக்கு போயிருக்கிறது.
இந்நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் ஒடுக்கு முறைகள், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான போராட்டங்கள் இல்லை.தொடர்ச்சியான போராட்டங்களை எப்பொழுது நடத்தலாம் என்றால்,அதற்கு வேண்டிய பொறிமுறைகள் கட்டமைப்புகள் இருக்கும் பொழுதுதான். அப்படிப்பட்ட கட்டமைப்புகளை எப்பொழுது உருவாக்கலாம் என்றால், எல்லாரும் ஒன்றிணையும் போதுதான். ஆனால் ஒன்றிணைவு அல்லது ஐக்கியம் போன்ற விடயங்களைப் பற்றி உரையாடுவதே உள்நோக்கமுடையது என்று வியாக்கியானம் செய்யப்படுகின்றது.
தமிழ் சிவில் சமூகங்களை வெளிநாட்டு தூதர்கள் சந்திக்கும் பொழுது அவர்கள் பொதுவாகக் கூறும் விடயங்களில் ஒன்று, உங்களுக்குள் ஐக்கியம் இல்லை என்பது. குறிப்பாக இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்திப்புகளின் போது அதைத் திரும்பத் திரும்பக் கூறுவதுண்டு. அதை வைத்துக்கொண்டு தூதரகங்கள் அதை விரும்புகின்றன,எனவே அதில் ஏதோ சூது இருக்கிறது என்று ஒரு வியாக்கியானம் வேறு வைக்கப்படுகிறது.
“முதலில் நீங்கள் ஐக்கியப் படுங்கள் ” என்று கூறுவதன் மூலம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வாயை அடைப்பதற்கு தூதரகங்கள் முயற்சிக்கக்கூடும். ஆனால் தூதரகங்கள் கூறுகின்றனவோ இல்லையோ தமிழ் மக்களுக்கு ஐக்கியம் தேவையா இல்லையா என்பதுதான் இங்குள்ள பிரதான கேள்வி. கடந்த 15 ஆண்டு கால தோல்விகளுக்கு ஐக்கியமின்மையே அடிப்படைக் காரணம் என்பதில் யாருக்காவது சந்தேகம் உண்டா?
ஐக்கியம்தான் பலம் என்று பாலர் வகுப்பிலிருந்து தமிழ் மக்கள் படிக்கிறார்கள். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு”, “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு ” என்றெல்லாம் அறநெறிகளைப் போதித்து விட்டு, இப்பொழுது ஏன் ஐக்கியப்பட வேண்டும் என்று கேட்கும் ஒரு நிலை. ஐக்கியப்பட முடியவில்லை என்பதால்தான் இப்படிக் கேட்கப்படுகிறது. எங்களால் முடியாத ஒன்றை தேவையா என்று கேட்கும் அரசியல் வங்குரோத்து நிலை.
ஐக்கியத்தை ஏற்படுத்தத் தேவையான ஜனவசியம் மிக்க தலைமைகள் அரங்கில் இல்லை.எந்த ஒரு கட்சியும் ஏனைய கட்சிகளை கவர்ந்திழுக்கும் பலத்தோடும் சக்தியோடும் இல்லை. ஒவ்வொரு கட்சியும் தனி ஓட்டம்.கட்சிக்குள்ளேயே பிரமுகர்கள் தனி ஓட்டம். சிவில் சமூகங்களும் தனி ஓட்டம். அரசு சார்பற்ற நிறுவனங்களும் தனியோட்டம்.
தூதரகங்களைச் சந்திக்கப் போகும்போது தங்களுக்கு இடையே ஒன்று கூடிக் கதைத்து விட்டுப் போகும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மிகக் குறைவு. அவ்வாறு செல்லும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெளிநாட்டுத் தூதுவர்கள் முன் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.தங்களுக்கு இடையே முன்கூட்டியே உரையாடி யார்,எதைக் கதைப்பது என்பதனைத் தீர்மானித்து விட்டுச் செல்லும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெளிநாட்டுத் தூதுவர்களின் முன்னிலையில் சிறப்பாக கருத்துருவாக்கம் செய்கிறார்கள். அதை அரசியல் கட்சிகளும் பின்பற்றினால் என்ன?
கடந்த 15 ஆண்டுகளாக இதைத்தான் தொடர்ந்து எழுத வேண்டியிருக்கிறது. ஆனால் தமிழ்க் கட்சிகளும் சிவில் சமூகங்களும் தாங்களாக ஐக்கியப் படுகின்றனவோ இல்லையோ அரசாங்கம் அவர்களை ஐக்கியப் படுத்துகின்றது என்பது மட்டும் உண்மை. கடந்த வாரம் வெடுக்கு நாறி மலையில் சிவராத்திரி பூஜையில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்ட விடயம் ஒப்பீட்டளவில் கட்சிகளையும் செயற்பாட்டாளர்களையும் ஐக்கியப்படுத்தியிருக்கிறது. அது தற்காலிகமானது. ஆனாலும் எதிர்தரப்புத்தான் தமிழ்க் கட்சிகளை ஐக்கிய படுத்துகின்றது என்பதனை அது மீண்டும் நிரூபித்திருக்கிறது.