தேசிய மாநாட்டுக்கான தடைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – எம்.ஏ .சுமந்திரன்!
”தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்குத் தடை கோரி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்ட நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் , சுமந்திரனின் ஆதரவாளர்களால் தொடரப்பட்டது எனவும் , வழக்குகளில் முன்னிலையான சட்டத்தரணிகளும் சுமந்திரனுக்கு ஆதரவானவர்கள் எனவும் கருத்துக்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தடை கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாராலையோ தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பில் நான் கருத்து கூற முடியாது. அத்துடன் அதற்கு பொறுப்பாளியாகவும் முடியாது. கட்சி கோரிக்கை விடுத்தால் இந்த வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் நான் முன்னிலையாகி கட்சி சார்பாக வாதாட தயாராகவுள்ளேன்” இவ்வாறு எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.