நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள் !
நம்முடைய உடல் இயக்கம் சீராக நடைபெறுதற்கு தூக்கம் முக்கியமானது. பிறந்த குழந்தைகள் ஒரு நாளில் 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்குவார்கள். வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்த இரவுத் தூக்கம் அவசியமானது.
தினசரி சீராக தூங்குவதன் மூலம் உடலையும், மனதையும் புத்துணர்வாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். அதே சமயம். ஒரு நாளில் 8 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் தூங்கினால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இரவு நேரத்தில் சீரான தூக்கம் கொள்ளாமல் பகல்பொழுதில் தூங்குவதும். நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்தை பாதிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
நீண்டநேரம் தூங்கும்போது தொடர்ச்சியாக உடல் அசைவின்றி இருக்கும். இதன் காரணமாக தசைகளின் இயக்கம் குறைந்து உறுப்புகளின் சீரான செயல்பாட்டில் இடையூறு ஏற்படும்.
இதன்மூலம் சோம்பல் உணர்வு அதிகரிக்கும். எந்த வேலையும் செய்ய முடியாமல் அலுப்பு உண்டாகும். நீண்ட நேரம் ஒரே மாதிரியான அமைப்பில் படுத்திருக்கும் போது முதுகுவலி ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
அதிக நேரம் தூங்கும்போது மூளையில் உள்ள நரம்புக் கடத்திகளின் செயல்பாடு குறைந்து நாளடைவில் நினைவாற்றல் இழப்பு ஏற்படக்கூடும். நீண்ட நேரம் தூங்கினால் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் செரோடோனின் அளவு குறையும்.
இதன் காரணமாக தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதுமட்டுமல்லாமல், சிந்திக்கும் திறன், தீர்வுகாணும் திறன் குறைந்து எதிர்மறையான மனநிலை மாற்றத்துக்கும் வழிவகுக்கும்.
அதிகப்படியான தூக்கம் ஹார்மோன் சுரப்பில் இடையூறை ஏற்படுத்துவதோடு, சீரற்ற நேரத்தில் தூங்கும் பழக்கத்தை உண்டாக்கும். இதன் மூலம் மனஅழுத்தம், மனச்சோர்வு, மறதி போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
சீரற்ற தூக்கத்தால் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதோடு உடல் இயக்கத்தின் அளவும் குறையும். இதனால், உடலில் தேவை யற்ற கொழுப்பு அதிகரிக்கும். இது உடல் பருமன் நோய்க்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.