அணு ஆயுதப் போர் மூளலாம் - பாராளுமன்ற உரையில் புதின் அதிரடி!
இன்னும் சில வாரங்களில் ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
பிரதமராகவும், அதிபராகவும் புதின் கடந்த 2 தசாப்தங்களாக அதிகாரத்தில் உள்ளார்.
இந்நிலையில், இன்று, ரஷிய அதிபர் புதின் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
மேற்கத்திய நாடுகள் ஆதிக்க மனப்பான்மையுடன் நமது வளர்ச்சியை முடக்க முயன்று வருகின்றன.
அது மட்டுமல்ல, அவர்கள் நம்மை அழிக்கவும் பார்க்கின்றனர்.
அவர்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும் நமது நாட்டையும் உக்ரைனையும் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தி கொள்வதில்தான் முனைப்பு காட்டுகின்றனர்.
நமக்கிடையே பிளவு ஏற்படுத்தி நம்மை வலிமை குறைந்தவர்களாக உருவாக்க முயல்கின்றனர்.
பெரும்பாலான ரஷிய மக்கள் உக்ரைனில் "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எடுக்கப்பட்டதை வரவேற்கிறார்கள்.
ரஷிய குடிமக்கள்தான் நமது சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.
நமது எதிர்காலம் செல்லும் திசை குடிமக்களாகிய உங்கள் கைகளில்தான் உள்ளது.
அரேபிய நாடுகள் மற்றும் லத்தீன் நாடுகளுடன் நமது உறவை நாம் வலுப்படுத்தி கொள்ள வேண்டும்.
நேட்டோ (NATO) நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் துருப்புகளை அனுப்பினால், அணு ஆயுதப் போர் துவங்கும்.
நேட்டோவில் பின்லாந்தும், சுவீடனும் இணைவதால் ரஷியாவின் மேற்கு பிராந்தியத்தை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
எந்த எதிரி நாட்டின் எல்லைக்கு உள்ளேயும் சென்று அழிக்க கூடிய ஆயுதங்கள் நம்மிடையே உள்ளன.
ரஷியாவை ஆக்கிரமிக்க எவரேனும் முனைந்தால் இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பாதிப்புகளை விட கடுமையான பாதிப்புகள் உருவாகும்.
இவ்வாறு புதின் கூறினார்.