Breaking News

' விஜய் மக்கள் இயக்கம்' முதல் 'தமிழக வெற்றிக் கழகம் ' வரை. - நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வு!

 


தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத  நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை 2009 ஜூலை மாதம் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதன் மூலம், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

படப்பிடிப்பில் பிஸியாக இருந்த போதும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல் கசிந்தது.

'லியோ' பட நிகழ்ச்சி மேடையில் நடிகர் விஜய் பேசியபோது தளபதி என்றால் என்ன அர்த்தம். நீங்கள் (ரசிகர்கள்) மன்னர்கள். நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என அரசியல் பயணம் குறித்து சூசகமாக தெரிவித்தார்.

விஜய் அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்ட நிலையில் 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பாக கடந்த சில மாதங்களாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது பூத் கமிட்டிகளை வலுப்படுத்த மக்கள் இயக்கத்தினருக்கு அறிவுறுத்தினார்.

இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினார்.

2026-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க முன்னோட்டமாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

விஜய் மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக விரைவில் மாற்றம் செய்ய நடிகர் விஜய் அப்போது மனதில் முடிவு செய்திருந்தார். அதைதொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ' தமிழக வெற்றி கழகம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நடிகர் விஜய் நேற்றையதினம்  வெளியிட்டார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.