Breaking News

வட்டியை செலுத்த இணக்கம் வௌியிட்டுள்ள மின்சார சபை!

 


புதிய மின்சார இணைப்புக்களை வழங்குவதற்காக நுகர்வோரிடமிருந்து இலங்கை மின்சார சபை சேகரிக்கும் வைப்புத்தொகைக்கு 2023 ஆம் ஆண்டிற்கான வட்டியை செலுத்தத் தயார் என இலங்கை மின்சார சபை இன்று (13) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நுகர்வோர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று எஸ்.துரைராஜா, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

அப்போது, ​​இலங்கை மின்சார சபை சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன், மின்சார இணைப்புக்களுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் வைப்புத்தொகைக்கு 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த வட்டியாக 11.67 வீதத்தை செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தயாராக உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை மின்சார சபை இந்த வட்டியை செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கொடுப்பனவு முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிய, சம்பந்தப்பட்ட மனு மார்ச் மாதம் 21ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இலங்கை மின்சார சபை சட்டத்தின் 28(3) சரத்தின் கீழ், புதிய மின்சார இணைப்புகளை வழங்குவதற்காக நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் வைப்புத்தொகைக்கான வட்டியை செலுத்துவதற்கு அந்த சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

ஆனால் இலங்கை மின்சார சபை இதுவரையில் அவ்வாறான வட்டியை செலுத்தவில்லை எனவும் இதன் ஊடாக தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.