Breaking News

காணாமல் ஆக்கப்பட்ட தமிழருக்கான பொறுப்பை ராணுவம் ஏற்க வேண்டும்


இலங்கை: 'போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமிழருக்கு ராணுவமே யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கந்தசாமி இளரங்கனுக்கான பொறுப்பை இலங்கை ராணுவம் ஏற்க வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் புதன்கிழமை (பிப். 07) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல்  தெரிவித்தார். 

நடந்தது என்ன? 

கந்தசாமி இளரங்கன் என்ற 28 வயதான இளைஞன் ஒருவன், 2006ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி காணாமல் போனதாக அவரது தாய் முறைப்பாடு செய்துள்ளார். வாகன ஓட்டுநரான கந்தசாமி இளரங்கன் ஓமந்தை வழியாக கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான முக்கிய சோதனைச் சாவடியாக ஓமந்தை சோதனைச் சாவடி அந்தக் காலப் பகுதியில் காணப்பட்டது. பெரும்பாலான தமிழர்கள் ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்தே காணாமல் ஆக்கப்பட்டதாக இன்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், கந்தசாமி இளரங்கன் பயணி ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விடுவதற்காக வேன் ஒன்றை ஓமந்தை சோதனைச் சாவடி வழியாகச் செலுத்தியுள்ளார். 

விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்த நிலையில், கந்தசாமி இளரங்கன், அவருடன் பயணித்த பயணி ஆகியோரை ராணுவம் இடைமறித்து சோதனை செய்துள்ளதாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார். 

இப்போது எப்படி இருக்கிறது? 

 ''ஓமந்தை சோதனைச் சாவடியில் ராணுவம் சோதனை செய்ததன் பின்னர், அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடையாது. அவர் அந்த வழியாகப் பயணித்தமைக்கான ராணுவப் பதிவு, பதிவுப் புத்தகத்தில் காணப்படுகின்றது. ஆனால், அவர் இத்தனை மணிக்கு வந்தார் என்பது தொடர்பான பதிவு உள்ளது. ஆனால், போனமைக்கான பதிவு இல்லை," என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார். 

கடும் கட்டுப்பாடுகள் நிலவிய காலப்பகுதி என்பதால், கந்தசாமி இளரங்கனின் தாயாருக்கு உடனடியாக, அவரது மகனைத் தேட முடியாத நிலைமை அன்று காணப்பட்டுள்ளது. அதன் பின்னரான காலத்தில் தனது மகன் தொடர்பில் போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பிடம் ஆராய்ந்துள்ளதுடன், தனது மகன் தொடர்பான எந்தவித தகவல்களையும் அவரால் அப்போது பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதையடுத்து, கந்தசாமி இளரங்கனின் தாயார், ஐ.சி.ஆர்.சி, மனித உரிமைகள் ஆணைக்குழு, போலீஸ் உயர் அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட தரப்பிடம் முறைப்பாடுகளைச் செய்த போதிலும், தனது மகன் தொடர்பான தகவல்களை தாயினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. 

இந்த நிலையிலேயே, கந்தசாமி இளரங்கனின் தாய், வவுனியா மேல் நீதிமன்றத்தில் 2000 ஆம் ஆண்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளதாக, மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் குறிப்பிடுகின்றார். இந்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை ராணுவ தளபதி, ராணுவத்தின் 211ஆம் படையணியின் கட்டளை தளபதி உள்ளிட்ட மூவர் பெயரிடப்பட்டுள்ளனர். ''இலங்கை ராணுவத்தால் இந்த மனு மீது ஆட்சேபனை செய்யப்பட்டுள்ளது. அவர் வந்தது உண்மைதான். ஆனால், அப்போதே அவர் சென்றுவிட்டார்," என இலங்கை ராணுவம் ஆட்சேபனை செய்ததாக மூத்த சட்டத்தரணி கூறுகின்றார்.