வடக்கில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் விமானப்படை!
இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலுள்ள 73 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு தினம் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான நட்புறவின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் பல விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக களனி ரஜமகா விகாரையில் விசேட பூஜைகள் மற்றும் சர்வ சமய சடங்குகளுக்கு முன்னுரிமை அளித்து, 73வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த வருடமும் விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படையின் மரியாதை அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி நோக்கங்களுக்கு இணங்க, தரமான கல்வி மற்றும் சுற்றாடல் பேண்தகைமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வடக்கு மாகாணத்தில் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கி அபிவிருத்தி செய்யப்படவுள்ள 73 பாடசாலைகள் இனங்காணப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு, அதற்காக 100 மில்லியன் ரூபா நிதி மதிப்பிடப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மார்ச் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் தொழில்நுட்ப, கல்வி கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை விமானப்படையின் விமானங்கள், வளங்களின் கண்காட்சி மற்றும் விமானப்படையின் பணிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி பற்றிய விழிப்புணர்வும் இடம்பெறவுள்ளது.
இந்த கண்காட்சியில் வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களின் புத்தாக்க உபகரணங்களை காட்சிப்படுத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்காக இக்கண்காட்சி முற்றாக இலவசமாக இடம்பெறுவதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.