நிலநடுக்கத்தால் நகர்ந்த ஜப்பான் நிலப்பரப்பு.. பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!
ஆங்கில புத்தாண்டு தினத்தில் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் மிக கடுமையான நிலநடுக்கம் ஜப்பானை ஒருவழியாக்கியது. ஜப்பானில் ஜனவரி 1-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.5 ஆக பதிவானது. இதன் காரணமாக அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சுனாமி அலைகளால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது.
இந்த நிலையில், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் நிலப்பரப்பு மேற்கு நோக்கி 130 செ.மீ. வரை நகர்ந்து இருக்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் நிலப்பரப்பு ஒரு மீட்டருக்கும் அதிகமாக நகர்ந்து இருக்கிறது. இது பற்றிய தகவல்கள் அந்நாட்டில் உள்ள அதிநவீன ஜி.பி.எஸ். ஸ்டேஷன்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 62 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் 300-க்கும் அதிகமானோருக்கு காயங்களும், 20 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 31 ஆயிரத்து 800 பேர் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், அவசகர கால பணிகள் மற்றும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஃபுமியோ கிசிடா தலைமையிலான அரசு முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறது. ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.