Breaking News

மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவது ஆபத்தானது- கிஷோர் விமர்சனம்!

 


கடந்த 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் அயோத்தி சர்ச்சையானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில், பிரபலங்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமர் கோவில் திறப்புக்கு ஆதரவாக பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், மதச்சார்பற்ற நாட்டில் மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டுவது சரியா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பை விமர்சித்து நடிகர் கிஷோர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கோவில், மன்னர்கள் மற்றும் அரசியலை வைத்து அடக்குவது என்பது நாம் இதுவரை பார்த்திராத ஒன்று அல்ல. இன்று நாம் மன்னர்களின் காலத்திற்கு சென்றுவிட்டதாக உணர்கிறேன். கடவுளின் பெயரால் சாமியார்களுடன் கைகோர்த்து, மக்களை அடக்கி வருகின்றனர்.

கோவிலை கட்டி அதில் தங்களின் பெயர்களை செதுக்கி வைத்து கொள்வது, கோவிலை கட்டிய நபர்களின் கையை வெட்டுவது, தங்களின் பெருமையை பேசி வானுயர பேனர் வைத்து கொள்வது முடிவின்றி தொடர்கிறது. மதமும், கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவதும், அவர்களை கேள்வி கேட்க முடியாத இடத்துக்கு எடுத்து செல்வதும் மிகவும் ஆபத்தானது. நாட்டின் கலாசாரத்தின் எதிர்காலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்" என பதிவிட்டுள்ளார்.