மனித மூளையில் வெற்றிகரமாக சிப் பொருத்திய மஸ்கின் நிறுவனம்!
அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீசுவரர்களில் முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் நிறுவியது, நியூராலிங்க் (Neuralink) எனும் நிறுவனம்.
மனித மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி செய்ய தொடங்கப்பட்டது நியூராலிங்க்.
கடந்த வருடம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA), நியூராலிங்க் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப் எனப்படும் மின்னணு சில்லுகளை பொருத்தி அவற்றின் மூலம் மனித மூளையின் திறனை மேம்படுத்தவும், நோய்களின்றி வாழ வழி செய்யவும் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் முயற்சியாக ஒரு மனிதரின் மூளையில் "சிப் பொருத்துதல்" வெற்றிகரமாக நடந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.
மேற்கொண்டு எந்த தகவலையும் நியூராலிங்க் வழங்கவில்லை.
நியூராலிங்க் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட்டின் துணையுடன், மிக துல்லியமாக நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் இந்த சிப் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்ட பரிசோதனைகளில் இந்த சிப்பில் இருந்து மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் (electrical signal conduction) நடக்க தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
பக்கவாதம் போன்ற மனிதர்களை செயலிழக்க செய்யும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்கள், முகம் உள்ளிட்ட உறுப்புகள் அசைவற்று போய் விடும். அந்நிலையில் உள்ளவர்களுக்கு அவர்களின் மூளை, உடல் உறுப்புகளுக்கு எண்ணங்கள் மற்றும் கட்டளைகளை உடனுக்குடன் அனுப்பும் பரிமாற்றமும் நின்று விடும்.
அத்தகைய குறைபாடு உள்ளவர்களின் மூளையில் மின்னணு சிப் பொருத்தி, அவற்றை எண்ணங்களின் மூலம் கட்டுப்படுத்தி, அதன் பயனாக உறுப்புகளை செயல்பட வைக்க முயல்வதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
தனிப்பட்ட பங்குதாரர்களை கொண்டு மஸ்க் உருவாக்கியுள்ள நியூராலிங்க், தற்போது $5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.