Breaking News

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் குற்றச்சாட்டு!

 


பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான கற்றல் கொடுப்பனவை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கான தீர்மானம் தொடர்பிலான சுற்றறிக்கையை வெளியிட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

விரிவுரையாளர்களின் ஜனவரி மாத சம்பளத்தில் கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் உபதலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவிடம் அத தெரண வினவிய போது, கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் திறைசேரி விடுத்துள்ள சுற்றறிக்கை அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் சம்பளத்துடன் கொடுப்பனவு சேர்க்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பான கடிதங்கள் கடந்த புதன்கிழமை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.