Breaking News

வவுனியாவில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டம்!

 

வவுனியாவிற்கு இன்று (05) காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் மாநகரசபை கலாச்சார மண்டபத்திற்கு ஜனாதிபதி வருகை தந்த சமயத்தில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டிருந்தமையுடன் பல மணிநேரமாக இரு தரப்பினருக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டிருந்தமையுடன் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர். இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டது.



இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் சார்ல்ஸ்நையஸ் ஆகிய பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவ் கைது நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட இருவருக்கும் பொலிஸாருக்கிடையே தர்க்கமும் ஏற்பட்டிருந்தது. பெண் பொலிஸாரினால் இருவரும் பேருந்தில் ஏற்றப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதேவேளை கைதுசெய்யப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு இன்றைய தினம் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.