முல்லைத்தீவில் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக அம்மாவட்டத்தின் சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலை வரையான தகவல்களின் அடிப்படையில் 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுவதுடன், திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம் மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குளங்களுக்கான நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுவதால் பல குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதோடு வெள்ளநீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மக்களை மிக அவதானமாகச் செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.