சந்தனப்பேழையில் விடைபெற்றார் விஜயகாந்த்!
தே.மு.தி.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த்தின் பூதவுடன், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
தே.மு.தி.க. தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரின் உடல் தே.மு.தி.க. அலுவலகத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடல் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.
இவரின் உடலுக்கு அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், கட்சியின் தொண்டர்கள், ரசிகர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அந்தவகையில், கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் இவரது உடல் தீவுத்திடல் பகுதியிலிருந்து தே.மு.தி.க. கட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இந்த இறுதி ஊர்வலத்தில் வரலாறு காணாத மக்கள் கூட்டம் திரண்டமையால், சென்னை பூந்தமல்லி வீதியின் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், அன்னாருக்கு பூக்களை தூவியும் கட்சிக் கொடிகளை ஏந்தியும் கண்ணீரால் தங்களின் அஞ்சலியை செலுத்தினர்.
இதனையடுத்து விஜயகாந்த்தின் பூதவுடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனை முன்னிட்டு, குறித்த பகுதியில் பொலிஸாரினால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்து.
அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அன்னாரின் பூதவுடல் கொண்டுவரப்பட்டபோது அங்கு கூடியிருந்த மக்கள் கண்ணீரால் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின்னர், அன்னாரின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கில் தமிழக அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான சுப்பிரமணியன், அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.