முதல்முறையாக பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட இந்து பெண் வேட்பு மனு தாக்கல்!
பாகிஸ்தான் நாட்டில் பொதுத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 266 இடங்கள் மற்றும் 4 மாகாண சட்டபேரவைக்கான 600 இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப், மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இத்தேர்தலில் முதன்முதலாக இந்து சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது பெயர் சவீரா பிரகாஷ். கைபர் பக்துன்காவின் புனர் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் (PK-25) பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரது தந்தை ஓம் பிரகாஷ் ஓய்வு பெற்ற மருத்துவர்.
சவீரா பிரகாஷ் கடந்த ஆண்டு கைபர் பக்துன்காவின் அபோதாபாத் சர்வதேச மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புனர் மாவட்ட பெண்கள் பிரிவு பொது செயலாளராக உள்ளார். பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பொது இடங்களில் ஐந்து சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சவீரா பிரகாஷ் அளித்துள்ள பேட்டியில் "தனது தந்தையின் வழியை பின்பற்றி பின் தங்கிய மக்களுக்காக பணியாற்றுவேன். பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் பாடுபடுவதற்காகவும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளேன்" தெரிவித்துள்ளார்.