மனதை நெகிழ வைக்கும் முன்னணி கதாநாயகனின் 30 வருட பழக்கம்!
1965ல் ஜோ கோல்ட் (Joe Gold) எனும் தொழில்முறை உடற்பயிற்சியாளர் தொடங்கிய கோல்ட்'ஸ் ஜிம் (Gold's Gym) தொடர் உடற்பயிற்சி கூடம் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது.
இங்கு உடற்பயிற்சி பயின்றவர்களில் முன்னாள் கலிபோர்னியா கவர்னரும், ஹாலிவுட் முன்னணி ஹீரோவுமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger) ஒருவர்.
ஆஸ்திரியா நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த அர்னால்ட், ஹீரோவாக பிரபலமடையும் முன்பு போதுமான வருவாய் இல்லாமல் இருந்த போது கோல்ட்'ஸ் ஜிம் நண்பர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது தங்களின் கொண்டாட்டத்தில் அர்னால்டையும் இணைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
இதை மறக்காத அர்னால்ட் கடந்த 30 வருடங்களாக அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகருக்கு அருகே உள்ள பாயில் ஹைட்ஸ் (Boyle Heights) பகுதியில் ஹாலென்பெக் யூத் சென்டர் (Hollenbeck Youth Center) எனும் சமூக நல கூடத்தில் ஆண்டுதோறும் ஏழை எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தனது செயல் குறித்து அவர் தெரிவித்ததாவது:
நான் அமெரிக்கா வந்த போது ஜிம் நண்பர்கள் என்னிடம் கனிவுடன் நடந்து கொண்டனர். எனக்கு பல பரிசுகளை அளித்தார்கள். அயல்நாட்டை சேர்ந்தவனாக கருதாமல் என்னையும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நடத்தினர். அழகான கிறிஸ்துமஸ் மரம் செய்து வைத்திருப்பார்கள். அந்த நினைவுகள் மிக இனிமையானவை. அந்த மகிழ்ச்சியை நான் பலருக்கும் மீண்டும் வழங்க நினைக்கிறேன். அதனால்தான் 30 வருடங்களுக்கும் மேலாக இந்த செயலை தவறாமல் கடைபிடிக்கிறேன். எனக்கு இது மிகுந்த மனநிறைவை தருகிறது. இதன் மூலம் பலரும் இதே போன்று பிறருக்கு உதவிட வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு அர்னால்ட் கூறினார்.
பணம், புகழ், பதவி மற்றும் உலகெங்கும் ரசிகர்கள் என அனைத்தையும் பெற முடிந்த நிலையிலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு நற்செயலை தொடர்ந்து செய்து வரும் அர்னால்டின் உதவும் மனப்பான்மை சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்படுகிறது.