சிங்கப்பூரின் உயரிய விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர்!
சிங்கப்பூரில் கலை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.
இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான விருதை புகழ்பெற்ற இந்திய பெண் எழுத்தாளரான மீரா சந்த் (81), பெற்றுள்ளார்.
மீரா சந்த் பல்வேறு கலாசார சமூகங்கள் குறித்த புத்தகங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர். மீரா சந்த் உடன் நாவலாசிரியர் சுசென் கிறிஸ்டின் லிம் மற்றும் மலேசியா நாட்டிய கலைஞர் ஒஸ்மான் அப்துல் ஹமீது ஆகியோரும் இந்த உயரிய விருதை பெற்றனர். இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 லட்சம் வெகுமதியும் இந்த விருதில் அடங்கும்.
சிங்கப்பூர் அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மீரா சந்த் உள்பட 3 பேருக்கும் விருது வழங்கி கவுரவித்தார்.
கடந்த வருடம் தமிழரான இந்து அரவிந்த் குமாரசாமிக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.