மிக்ஜாம் சூறாவளியின் தற்போதைய நிலை!
மிக்ஜாம் சூறாவளி இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இருந்து வடமேற்கு நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இது வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 05 ஆம் தேதி தெற்கு ஆந்திரா கடற்கரையில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் சூறாவளி இன்று முற்பகல் 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து 320 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், இன்று காலை வெளியிடப்பட்ட சிவப்பு அறிவித்தல் மூலம் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் வரையான
கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அந்த பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.